மூலதனம் – இரண்டாம் பாகம் வாசிப்பு அனுபவமும் புரிதலும்…
முதல் பாகத்தை வாசித்த அனுபவத்தோடு, அதாவது முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படை இயக்கத்தை ஓரளவு புரிந்து கொண்ட அனுபவத்துடன், மூலதனம் நூலின் இரண்டாம் பாகத்தை 2022 ஆம் ஆண்டு மே மாதம் வாசிக்கத் தொடங்கினோம்.
முதல் பாகத்தில் ஒரு தொழிற்சாலைக்குள் உற்பத்தி நிகழ்முறை எவ்வாறு நடைபெறுகிறது? உபரி மதிப்பு எவ்வாறு உருவாகிறது? தொழிலாளி எவ்வாறு சுரண்டப்படுகிறார்? அவருடைய அவல நிலை என்ன? அதற்கு எதிரான அவருடைய போராட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? என்பவற்றை தோழர் கார்ல் மார்க்ஸ் பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்து, அவற்றிலிருந்து மேற்கோள்களையும் எடுத்துக்காட்டுகளையும் வழங்கி விரிவாக விளக்குகிறார்.
முதல் பாகத்தோடு ஒப்பிடும்போது, இரண்டாம் பாகம் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் நம்மை அழைத்துச் செல்கிறது. இங்கு உற்பத்தி நிகழ்முறையைத் தொடர்ந்து, மூலதனம் சந்தைச் சுற்றோட்டத்தில் எவ்வாறு இயங்குகிறது, பல்வேறு வடிவங்களாக எவ்வாறு மாறுகிறது, மீண்டும் உற்பத்தி நிகழ்முறைக்குள் எவ்வாறு திரும்புகிறது என்பதைக் காண்கிறோம்…
மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு, அவரிடம் இருந்த கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்து, தொகுத்து, திருத்தி, பிரெடெரிக் ஏங்கெல்ஸ் 1885 ஆம் ஆண்டு மூலதனத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார்.

முதல் பாகத்திலிருந்து இரண்டாம் பாகத்திற்கான பயணம்.
முதல் பாகத்தை வாசிக்கும் போது, உற்பத்தி நிகழ்முறை, உபரி மதிப்பு உற்பத்தி, மூலதனம், உழைப்புச் சக்தி போன்ற அடிப்படைக் கருத்துகளையும் கலைச்சொற்களையும் உள்வாங்கிக் கொள்வதில் எங்களுக்கு சிரமம் இருந்தது. அதனால் ஒவ்வொரு கருத்தையும் எழுதி, மீண்டும் மீண்டும் வாசித்து, விவாதித்து புரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஆனால் முதல் பாகத்தை வாசித்து முடித்தபோது, முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படை இயக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு அடித்தளம் உருவாகியிருந்தது.
அதன் காரணமாக இரண்டாம் பாகத்தை வாசிக்கும் போது, முதல் பாகத்தைப் போல ஒவ்வொரு கருத்தையும் எழுதி வைத்துக் கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை அதிகமாக ஏற்படவில்லை. வாசிக்கும் போதே புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தன்மையையும் பக்குவத்தையும் தோழர் மார்க்ஸ் நம்மை உருவாக்கியிருக்கிறார்….
இருந்தாலும், இரண்டாம் பாகம் ஒரு புத்தகம்தான் என்றாலும், அதை முழுமையாக வாசித்து முடிக்க எங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டது.
2022 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வாசிப்பு, பல்வேறு இடையூறுகளையும் தாண்டி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.
சந்தைச் சுற்றோட்டத்தின் சிக்கல்களை அவிழ்க்கும் மார்க்ஸ்
முதலாளித்துவ சமூகத்தின் சந்தைச் சுற்றோட்டம் என்பது நமக்கு ஆரம்பத்தில் ஒரு இடியாப்பச் சிக்கல் போன்றே தோன்றுகிறது.
ஒரு இடத்தில் பணம் இருக்கிறது. அது உற்பத்திக்குச் செல்கிறது. உற்பத்தியில் இயந்திரங்கள், கட்டிடங்கள், மூலப்பொருட்கள், உழைப்புச் சக்தி ஆகியவற்றாக மாறுகிறது. பின்னர் உற்பத்திப் பொருட்கள் சரக்குகளாக உருவாகின்றன. அந்தச் சரக்குகள் சந்தைக்குச் செல்கின்றன. அவை விற்கப்பட்ட பிறகு மீண்டும் பணமாகத் திரும்புகின்றன.
அதோடு கதை முடிந்து விடுவதில்லை.
மீண்டும் அந்தப் பணம் உற்பத்திச் சாதனங்களாகவும், உழைப்புச் சக்தியாகவும் மாற்றப்படுகிறது. அவை மீண்டும் உற்பத்தி நிகழ்முறைக்குள் செல்கின்றன. அங்கிருந்து மீண்டும் சரக்குகள் உருவாகின்றன. அவை மீண்டும் சந்தைக்குச் செல்கின்றன.
இவ்வாறு பணம் → உற்பத்தி → சரக்கு → பணம் என்ற இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
இந்தச் சுற்றோட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மூலதனம் எவ்வாறு ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறுகிறது என்பதையும், அந்த மாற்றம் ஏன் அவசியமாகிறது என்பதையும் மார்க்ஸ் மிகவும் நுணுக்கமாக ஆராய்கிறார்.
சந்தைச் சுற்றோட்டத்தில் உள்ள ஒவ்வொரு முடிச்சையும் அவசரப்படாமல், மெதுவாக அவிழ்த்து, அதன் பின்னால் இருக்கும் பொருளாதார உறவுகளை தெளிவாக எடுத்துக்காட்டுகளுடனும் ஆய்வுகளுடனும் விளக்குகிறார்.
அதனால் ஆரம்பத்தில் சிக்கலாகத் தோன்றிய பல விஷயங்கள், மார்க்ஸின் விளக்கத்தின் வழியாகச் செல்லச் செல்ல தெளிவாகத் தொடங்குகின்றன…
மூலதனத்தின் சுற்றோட்டமும் மறுஉற்பத்தியும்…
இரண்டாம் பாகத்தில் முதலாளி முதலில் பணமூலதனத்தை முன்னீடு செய்கிறார்.
அந்தப் பணத்தின் மூலம் உற்பத்திச் சாதனங்களையும் — இயந்திரங்கள், கட்டிடங்கள், மூலப்பொருட்கள் போன்றவற்றையும் — உழைப்புச் சக்தியையும் வாங்குகிறார்.
இவை உற்பத்தி நிகழ்முறைக்குள் செல்கின்றன. அங்கு புதிய சரக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அந்தச் சரக்குகள் சந்தையில் விற்கப்பட வேண்டும். விற்பனை நடைபெற்ற பின்னரே உற்பத்திக்காக முன்னீடு செய்யப்பட்ட மதிப்பு மீண்டும் பண வடிவத்திற்குத் திரும்புகிறது. ஆனால் அது தொடக்கத்தில் முன்னீடு செய்யப்பட்ட பணமாக மட்டும் திரும்புவதில்லை; உற்பத்தி நிகழ்முறையில் உருவாக்கப்பட்ட உபரி மதிப்பும் அதனுடன் இணைந்து பண வடிவில் திரும்புகிறது.
அதாவது,
பணம் → உற்பத்தி → சரக்கு → அதிகமான பணம்
என்ற இயக்கத்தை நாம் காண்கிறோம்.
இந்தப் பணம் மீண்டும் உற்பத்திக்குத் தேவையான உற்பத்திச் சாதனங்களாகவும் உழைப்புச் சக்தியாகவும் மாற்றப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி மீண்டும் தொடங்குகிறது.
எனவே முதலாளித்துவ உற்பத்தி என்பது ஒருமுறை நடைபெறும் ஒரு நிகழ்வு அல்ல. தொடர்ச்சியாக நடைபெறும் சுற்றோட்டமும் மறுஉற்பத்தியும் கொண்ட ஒரு நிகழ்முறை.
இந்த நிகழ்முறை எவ்வாறு தடையின்றி தொடர்கிறது? எங்கு தடைகள் உருவாகின்றன? மூலதனம் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறுவதில் என்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன? உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் சந்தையில் விற்கப்படாமல் நின்றுவிட்டால் என்ன நடக்கும்? பணமூலதனம், உற்பத்தி மூலதனம், சரக்கு மூலதனம் ஆகிய வடிவங்களுக்கிடையே என்ன தொடர்பு உள்ளது? போன்ற பல கேள்விகளுக்கு இரண்டாம் பாகம் நம்மை அழைத்துச் செல்கிறது…
இரண்டரை ஆண்டுகால கூட்டுவாசிப்பு
இந்த வாசிப்பு பயணம் எளிதானதாக இருக்கவில்லை.
வாசிப்புக்கு வந்த தோழர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட சூழ்நிலைகள் இருந்ததால், அனைத்து வகுப்புகளிலும் தொடர்ந்து கலந்து கொள்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டன. சில நேரங்களில் பல வாரங்கள் வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.
இருந்தபோதிலும், வாசிப்பை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டோம்.
இடையூறுகள் இருந்தாலும், விவாதங்கள் தாமதமானாலும், மீண்டும் மீண்டும் ஒன்றிணைந்து வாசித்து, விவாதித்து, புரிந்து கொண்டு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மூலதனம் இரண்டாம் பாகத்தின் வாசிப்பை நிறைவு செய்தோம்.
முதல் பாகம் நமக்கு முதலாளித்துவ உற்பத்தி நிகழ்முறைக்குள் அழைத்துச் சென்று, உபரி மதிப்பு எவ்வாறு உருவாகிறது, தொழிலாளி எவ்வாறு சுரண்டப்படுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள உதவியது என்றால், இரண்டாம் பாகம் அந்த உற்பத்தியில் உருவாகிய மூலதனம் சந்தைச் சுற்றோட்டத்தில் எவ்வாறு இயங்குகிறது, பல்வேறு வடிவங்களாக எவ்வாறு மாறுகிறது, மீண்டும் உற்பத்தி நிகழ்முறைக்குள் எவ்வாறு திரும்புகிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவியது.
இரண்டாம் பாகத்தை வாசித்த இந்த இரண்டரை ஆண்டுகால பயணம், மூலதனத்தின் இயக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான எங்களுடைய புரிதலில் மேலும் ஒரு முக்கியமான படியாக அமைந்தது.
மார்க்ஸின் ஆய்வு முறை, சிக்கலானதாகத் தோன்றும் முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார இயக்கங்களை ஒவ்வொரு கட்டமாகப் பிரித்து, ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, அதன் உள்ளார்ந்த தொடர்புகளை நமக்கு வெளிப்படுத்துகிறது.
இதுவே மூலதனத்தின் இரண்டாம் பாகம் குழு வாசிப்பில் எங்களுக்கு கிடைத்த மிக முக்கியமான அனுபவம்….
நன்றி…
மீண்டும் சந்திப்போம் 🙏…
ஒரு தொழிலாளியின் மூலதனம் நூல் வாசிப்பு அனுபவம் பாகம் ஒன்றை படிக்க இங்கே கிளிக் செய்யவும் https://muranpaadu.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%aa-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae/

Leave a Reply