சென்னை உயர் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பு, அதாவது BC(M) இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணை (நிலை) எண். 31-ஐ ரத்து செய்தது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, முஸ்லிம் லெப்பை சமுதாயச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில்தான் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இது இப்போது இட ஒதுக்கீடு மற்றும் மதச் சுதந்திரம் குறித்த மிகப்பரந்த விவாதமாக உருவெடுத்துள்ளது.
மனுதாரர் ஆன்லைனில் விண்ணப்பித்த சமூக சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரியும், தமக்கு “முஸ்லிம் லெப்பை” சமூக சான்றிதழை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கக் கோரியும் வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாடு அரசாங்கம் இந்த வழக்கில் நீதிமன்த்றதால் ஒரு தரப்பாக 11.06.2026 அன்று சேர்க்கப்பட்டது.
இந்தக் குறிப்பிட்ட நிவாரணத்துடன் மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், நீதிமன்றம் 09.03.2024 நாளிட்ட அரசாணை எண் 31-ஐ ரத்து செய்தது.
1. ஒரு அரசாணையின் செல்லுபடித்தன்மையை நீதிமன்றம் தன்னிச்சையாகப் பரிசீலித்ததால், இது தெளிவான நீதித்துறை வரம்புமீறல் ஆகும். வழக்கமாக, பாதிக்கப்பட்ட தரப்பு ஒரு குறிப்பிட்ட அரசாணையின் செல்லுபடித்தன்மையை நேரடியாக எதிர்த்து மனு தாக்கல் செய்யும் போது மட்டுமே அது அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்கப்படும். இருப்பினும், தீர்ப்பின் 5-வது பத்தி, “அரசாணை (நிலை) எண் 31-ன் செல்லுபடித்தன்மையை சோதிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே” இந்த வழக்கு பட்டியலிடப்பட்டது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
2. இஸ்லாதிற்கு மாறும் BC, MBC, DNC, SC ஆகியோர் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்’ (BCM) என்று கோர முடியாது என்றும், அவர்கள் பொதுப் பிரிவின் கீழ் வருவார்கள் என்றும் இத்தீர்ப்பு உரைக்கிறது.
3. இந்தியாவில் இடஒதுக்கீட்டின் அடிப்படை அரசியலமைப்புக் கோட்பாடு என்பது, ஆழமாக வேரூன்றிய சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலையை நிவர்த்தி செய்வதாகும். ஒருவருடைய மத அடையாளம் மாறுவதால், சமூக புறக்கணிப்போ அல்லது கல்வி வாய்ப்புகளின்மையோ உடனடியாக மறைந்துவிடுவதில்லை.
மதமாற்றம் அடைந்தவர்களை பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குள் சேர்ப்பதை மறுப்பது என்பது மதமாற்றத்திற்குப் பிறகும் அவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் பின்னடைவுகளைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர் என்ற சமூக யதார்த்தத்தை புறக்கணிப்பதாகும்.
4. மதமாறிய ஒருவரை “அவர் வெறும் முஸ்லிம் மட்டுமே, அதற்கு மேல் ஒன்றுமில்லை” என்று எளிமைப்படுத்தி வகைப்படுத்துவதன் மூலம், BC, MBC, DNC அல்லது SC பின்னணியைக் கொண்ட மிகவும் பின்தங்கிய ஒருவரை, சமூக மற்றும் கல்வி ரீதியாக முன்னேறிய முஸ்லிம் பிரிவினருடன் ஒரே போட்டிப் களத்தில் நீதிமன்றம் நிறுத்துகிறது. இது சமமற்றவர்களை சமமாக நடத்துவதாகும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ‘உள்ளடக்கிய சமத்துவ’ கோட்பாட்டை நேரடியாக மீறுகிறது.
5. தங்களுக்குப் பிடித்தமான ஒரு மதத்தை சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பதற்கும், பின்பற்றுவதற்கும், பரப்புவதற்கும் உள்ள அடிப்படை உரிமையை (அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25) முடக்கும் ஒரு கடுமையான தடையாக இத்தீர்ப்பு அமைகிறது; ஏனெனில் தனிநபர்கள் தங்களின் ஆன்மீக நம்பிக்கைகளுக்கும் அல்லது பொது வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கான வாய்ப்புகளுக்கும் இடையே ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
6. மனுதாரரின் வழக்கறிஞர் தாம் வக்காலத்து மாற்றத்தை வழங்கிவிட்டார், மனுதாரர் மற்றொரு வழக்கறிஞரை நியமிக்க நீதிமன்றம் அவகாசம் வழங்கவில்லை. மேலும், “குறிப்பிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டாம்” என்று கூடுதல் தலைமை வழக்குரைஞர் (AAG) நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். (Para 7)
7. இந்த அரசாணை தன்னிச்சையாகப் பிறப்பிக்கப்படவில்லை என்பதை AAG நிறுவினார். மாறாக விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, 06.02.2024 நாளிட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் முறையான, எழுத்துப்பூர்வமான பரிந்துரையின் அடிப்படையில் இது இயற்றப்பட்டது. பின்தங்கிய நிலை குறித்து இந்த ஆணையத்தின் சட்டப்பூர்வ கண்டுபிடிப்புகளும் பரிந்துரைகளும் அரசை சட்டப்படி கட்டுப்படுத்தக் கூடியவை என்பதால், அவற்றைச் செயல்படுத்துவதற்காக அரசு இந்த அரசாணை 31-ஐ வெளியிட்டது.
8. அரசின் இந்தக்கொள்கை தற்போதுள்ள சமூக சமநிலையை சீர்குலைக்காது, ஏனெனில் இது மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு முன்னேறிய சமூகத்திலிருந்து (OC) இஸ்லாமிற்கு மாறும் ஒரு நபர் ஒருபோதும் BCM அந்தஸ்திற்கு தகுதி பெற முடியாது. ஏற்கனவே பின்தங்கிய பிரிவுகளில் (BC, MBC, DNC, SC) இருந்து இடஒதுக்கீடு பலன்களைப் பெற்றுவந்த நபர்கள், மதமாற்றத்தின் காரணமாக மட்டுமே அந்த முக்கிய வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்பதை மட்டுமே இந்த அரசாணை உறுதி செய்கிறது.
9. அரசாணை 31 ஏற்கனவே பல அமர்வு நீதிமன்றத் தீர்ப்புகளில் (உதாரணமாக, WA No. 2813 of 2021) ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று AAG வாதிட்டார், ஆனால் அது இந்த நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
10. மேலும், ஒரு ஜமாஅத் சான்றிதழ் வழங்கிவிட்டால், வருவாய்த்துறை அதிகாரிகள் அதை கேள்வி கேட்க முடியாது என்றும், ஜமாஅத்தின் தன்னாட்சி முடிவிலோ அல்லது நிபுணர் குழுவின் கொள்கை கட்டமைப்பிலோ நீதிமன்றம் தலையிடுவது நியாயமற்றது என்றும் AAG வாதிட்டார்.
11. தீர்ப்பின் பத்தி 6ல், இதே நீதிபதி இதற்கு முன்பு 01.12.2022 அன்று, மதமாறிய ஒருவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சலுகைகளை மறுத்த TNPSC முடிவை உறுதி செய்திருந்ததை வெளிப்படுத்துகிறது. அதன்பின்னர், மதமாறிய BC, MBC, DNC, SC மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசு அரசாணை 31-ஐ வெளியிட்டபோது, இப்போது நீதிமன்றம் அதை ரத்து செய்துள்ளது.
12. இதை நியாயப்படுத்துவதற்காக, பாரதிதாசன் பல்கலைக்கழக வழக்கை மேற்கோள் காட்டப்படுகிறது. ஆனால், அந்த முன்னுதாரணம் ஓர் அதிகார அமைப்பு முற்றிலும் சட்டபூர்வ அனுமதியின்றி செயல்படும் சூழ்நிலைகளுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதைய வழக்கில், அரசாணை 31 என்பது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தால் வகுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடைமுறையைப் பின்பற்றி, தகுதியான மாநிலத் துறையால் வெளியிடப்பட்டதால், அந்த வழக்கு இங்கு முற்றிலும் பொருந்தாது.
13. நீதிமன்றம் தனது முடிவை நியாயப்படுத்த காலாவதியான அல்லது தொடர்பற்ற தீர்ப்புகளைப் பெரிதும் நம்பியுள்ளது. மைக்கேல் வழக்கு (1952) 70 ஆண்டுகள் பழமையானது மற்றும் நவீன இடஒதுக்கீடு கோட்பாட்டைப் பிரதிபலிக்கத் தவறியது. 1952-ல் தமிழ்நாட்டில் தனியாக BCM இடஒதுக்கீடு இல்லை. இன்று, இந்திய முஸ்லிம் சமூகம் பல்வேறு சமூக-பொருளாதாரப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை சட்டம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறது. 1952-ஆம் ஆண்டின் விதியைப் பயன்படுத்துவது அனைத்து முஸ்லிம்களையும் ஒரே மாதிரியான கட்டமைப்பாகக் கருதுவதாகும், இது உண்மை அடிப்படையிலும், சமூகவியல் மற்றும் சட்ட ரீதியாகவும் தவறானது.
14. அதேபோல, சி. செல்வராணி வழக்கு (2024) என்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-ன் கீழ் கடுமையான குடியரசுத் தலைவர் உத்தரவால் நிர்வகிக்கப்படும், பிற மதங்களுக்கு மாறும் பட்டியலின (SC) நபர்களைப் பற்றியதாகும். ஆனால் தற்போதைய வழக்கு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 15(4) மற்றும் 16(4)-ன் கீழ் BC/MBC பிரிவினரைக் கண்டறிவது தொடர்பானது ஆகும். இதில் பின்தங்கிய நிலையை அடையாளம் காண மாநில அரசுக்கு வெளிப்படையான, நெகிழ்வான அரசியலமைப்பு அதிகாரங்கள் உள்ளன. நீதிபதி குடியரசுத் தலைவரின் உத்தரவையும், மாநில அளவிலான பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட BC(M) இடஒதுக்கீடையும் ஒப்பீடு செய்துள்ளார்.
15. கே.பி. மனு வழக்கு (2015) என்பது கிறிஸ்துவ மதத்திலிருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாறியவரைப் பற்றியது, எனவே அதை முதல் தலைமுறை முஸ்லிம் மதமாற்றத்திற்குப் பயன்படுத்துவது தவறானது.
மிக முக்கியமாக, மதமாற்றத்திற்குப் பிந்தைய சட்டப்பூர்வ அந்தஸ்து என்பது முற்றிலும் அந்தச் சமூகத்தின் ஏற்பைப் பொறுத்தது என்று கே.பி. மனு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசாணை 31-ஐ ரத்து செய்ததன் மூலம், மனுதாரரை உள்ளூர் ஜமாஅத் முறையாக ஏற்றுக்கொண்டதை நிராகரித்து, இந்தத் தீர்ப்பு கே.பி. மனு வழக்கிற்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.
தனிநபரின் சான்றிதழ் குறையை, நிபுணர்கள் குழுவின் ஆதரவு பெற்ற அரசாணையின் மீதான தன்னிச்சையான தாக்குதலாக மாற்றியதன் மூலம் இத்தீர்ப்பு நீதித்துறை வரம்பை மீறியுள்ளது.
சிறுபான்மையினருக்குள்ளான நவீன சமூகவியல் கட்டமைப்பை புறக்கணித்துள்ளது மற்றும் பின்தங்கிய மதமாறியவர்களின் அரசியலமைப்பு ரீதியான சமத்துவ உரிமையைப் பறிக்க முற்றிலும் மாறுபட்ட வழக்கு முன்னுதாரணங்களைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட இந்த அரசாணை ஏற்கனவே பல அமர்வு நீதிமன்றத் தீர்ப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமை வழக்குரைஞர் வாதிட்டதால், சம அதிகாரமுள்ள நீதிமன்ற அமர்வுகளுக்கு இடையேயான முரண்பட்ட தீர்ப்புகளுக்குத் தீர்வு காண, இந்த முழு விவகாரத்தையும் மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்குப் பரிந்துரைக்கக் கோரி தமிழ்நாடு அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் செய்திருக்க வேண்டும். ஆனால் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உச்சநீதிமன்றத்தை நாடுவதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய சர்ச்சை குறிப்பிட்ட நீதிபதியைக் குறித்தது அல்லாமல், தீர்ப்பின் அரசியலமைப்புச் சிக்கல்களை மையமாகக் கொண்டிருந்தாலும், வரலாற்று ரீதியான பதிவுகள் வேறுபட்ட கோணத்தை வழங்குகின்றன. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இதற்கு முன்பும் தனது சில நீதித்துறை சார்ந்த கருத்துகள் மற்றும் உத்தரவுகள் காரணமாக பொதுவெளியில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை மீறல் மற்றும் பக்கச்சார்பு குற்றச்சாட்டுகளைக் கூறி அவருக்கு எதிராக ஒரு கண்டனத் தீர்மானம் / பதவி நீக்க நோட்டீஸை (impeachment notice) தாக்கல் செய்தனர். பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் சென்னை உயர் நீதிமன்றம் முன்பு பதவி நீக்கத்திற்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டன.
(குறிப்பு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூற்றுப்படி, கூடுதல் தலைமை வழக்குரைஞர் காணொளி காட்சி வாயிலாக ஆஜரானார். இந்த கட்டுரை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு – ஜூலை மாதத்தில் எழுதியது.)
–Written By Safdar

Leave a Reply