தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் முன்னணியில் நிற்கும் பெருநிறுவனங்களின் உற்பத்தி சாதனைகளுக்குப் பின்னால், தொழிலாளர்களின் வியர்வையும் அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படும் அவலமுமே பெரும்பாலும் மறைந்து கிடக்கின்றன. சென்னை, அரக்கோணம், பாண்டிச்சேரி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்து டயர் உற்பத்தி செய்து வரும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான MRF, தொழிலாளர் உரிமைகளைப் புறந்தள்ளி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் அப்பட்டமான உழைப்புச் சுரண்டலின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. இங்குள்ள அனைத்து ஆலைகளிலும் தொழிலாளர்களின் உடல் உழைப்பு என்பது ஒரே மாதிரியாகவே உள்ளபோதிலும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு என்பது திட்டமிட்டு ஆலைக்கு ஆலை பாரபட்சமாக முரண்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், முதன்மை உற்பத்திப் பிரிவுகளிலேயே ஒப்பந்தத் தொழிலாளர்களை (Contract Labours) நேரடியாக ஈடுபடுத்தி, தரமற்ற டயர்களை உற்பத்தி செய்யும் ஆபத்தான போக்கையும் நிர்வாகம் துணிச்சலாகச் செய்து வருகிறது.
கடந்த மூன்று வருடங்களாக அங்குள்ள தொழிலாளர்களுக்கு எந்தவித ஊதிய உயர்வையும் தராமல் இழுத்தடித்த நிலையிலும், நிர்வாகம் கேட்டுக் கொண்டபடியே உற்பத்தியை மட்டும் தொழிலாளர்கள் பலமடங்கு அதிகரித்துக் காட்டினர். ஆனால், உழைத்த தொழிலாளர்கள் நியாயமான ஊதிய உயர்வைக் கேட்கும் போது, “முதலில் வந்து வேலை செய்யுங்கள், அப்புறம் பார்க்கலாம்” என்று ஆணவத்தோடு தட்டிக்கழித்தது ஆலை நிர்வாகம். இந்தத் தொடர் வஞ்சகத்தின் விளைவாக, சிஐடியு (CITU) தொழிற்சங்கம் தலைமையில் சுமார் 730 தொழிலாளர்கள் கடந்த ஜூலை 3, 2026 அன்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர்.
வேலைநிறுத்தம் தொடங்கி 10 நாட்கள் கடந்த நிலையில் தொழிலாளர் நலத்துறையோடு நடந்த பேச்சுவார்த்தையில், “வேலைநிறுத்தத்தைப் பின்வாங்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும்” என்று ஆலை நிர்வாகம் ஆணவத்துடன் பேசியதோடு அல்லாமல், போராடும் தொழிலாளர்களில் 20 பேரைப் பணியிடை நீக்கம் செய்தும் ஆணை பிறப்பித்தது. அதோடு நிற்காமல், நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் ஆலைக்கு வெளியே 300 மீட்டர் தொலைவில் ஒரு தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தக் கேட்கப்பட்ட அனுமதியைக் கூட தமிழ்நாடு காவல்துறை வழங்க மறுத்தது. போராட்டத்தைத் தொடர்ந்தால் பேச்சுவார்த்தையே நடத்த முடியாது என ஆலை நிர்வாகம் பகிரங்கமாகத் தொழிலாளர்களை மிரட்டியது.
இவ்வளவு அத்துமீறல்கள் நடந்தும் மாவட்ட ஆட்சியரோ அல்லது தொழிலாளர் நலத்துறை அமைச்சரோ இதைப் பற்றிக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளவே இல்லை. வேலைநிறுத்தத்தை முடக்கும் நோக்கில், சட்டவிரோதமாகப் பணியமர்த்தி மாற்று உற்பத்தியை MRF நிறுவனம் நடத்தியது. இதையெல்லாம் கண்டும் காணாமல் மெத்தனப்போக்கையே அதிகாரிகளும் அரசும் கடைப்பிடித்தனர். இறுதியாகப் பேச்சுவார்த்தை தோல்வி என அதிகாரப்பூர்வமாக முறிவு அறிக்கையை வெளியிட்டு, முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் இங்கிருக்கும் அரசு செயல்பட்ட விதம், இதற்கு முன்பு இருந்த திமுக ஆட்சியையே அச்சு அசல் நினைவூட்டியது. ஆட்சிகள் மாறினாலும் முதலாளிகளுக்குச் சேவகம் செய்யும் கட்சிகளின் வர்க்கக் குணம் மாறவே இல்லை என்பதையே அரசின் இந்த அடிமைச் செயல்பாடு அம்பலப்படுத்தியது.
இந்தப் போராட்டம் இதோடு முடங்கிவிடும் என்று ஆலை நிர்வாகமும் அரசும் மனப்பால் குடித்தன. ஆனால், இந்த அநீதிக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்க ஒற்றுமை பேரெழுச்சியாக வெடித்தது. ஜூலை 16 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள அப்பாலோ டயர்ஸ் நிறுவனத் தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜூலை 21 அன்று ஒரகடம் தொழிற்பேட்டையில் சிஐடியு மாநிலக் குழு சார்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடிப் பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். சாம்சங் இந்தியா நிறுவனத் தொழிலாளர்களும் போராட்டக் களத்திற்கே நேரடியாகச் சென்று தார்மீக ஆதரவளித்ததோடு, போராட்ட நிதி உதவியையும் வழங்கினர். “இவர்களால் என்ன பண்ணிட முடியும்?” என்று அலட்சியமாக நினைத்த ஆலை நிர்வாகத்திற்கும் அரசுக்கும், தொழிலாளர்களின் இந்த ஒன்றுபட்ட பேராதரவு ஒரு பெரும் நடுக்கத்தையும் பயத்தையும் உருவாக்கியது.
வேறு வழியே இல்லாமல், தமிழக அரசின் தலையீட்டின் பேரில் அரசு முன்பு நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை ஏற்புரை (Advice) வழங்கியது. அதைத் தொழிற்சங்கமும் நிர்வாகமும் ஏற்றுக்கொண்டன. இந்த ஏற்புரை முடிவுகள் தொழிலாளர்கள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அவர்களும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், 32 நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆகஸ்ட் 3, 2026 அன்று முறைப்படி முடிவுக்கு வந்தது.
அரசு முன்னிலையில் எட்டப்பட்ட நான்கு முக்கிய உடன்பாடுகள்:
1. 36 மாதங்களாக ஊதிய உயர்வு மறுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் ₹10,000 இடைக்கால நிவாரணமாக வழங்க முன்வந்தது; தொழிற்சங்கமும் அதை ஏற்றுக்கொண்டது.
2. ஊதிய உயர்வு உள்ளிட்ட இதர பொதுக் கோரிக்கைகளைத் தொழிலாளர் நீதிமன்றத்தின் (Labour Court) முறைப்படியான தீர்வுக்கு விட முடிவு செய்யப்பட்டது.
3. வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தொழிலாளர்கள் மீது எந்தவிதப் பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது.
4. முடிந்தவரை தன் சக்திக்கு உட்பட்டு தொழிலாளர்கள் உற்பத்திக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
ஆனால், தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பிய ஒரு சில வாரங்களிலேயே நிர்வாகம் அந்த முத்தரப்பு உடன்பாட்டை அப்பட்டமாகத் தூக்கி எறிந்துவிட்டு, தனது கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கையை மீண்டும் கட்டவிழ்த்துவிட்டது. செப்டம்பர் 8, 2026 அன்று கூடிய பெரம்பலூர் எம்.ஆர்.எஃப் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், நிர்வாகத்தின் 4 பெரும் ஒப்பந்த மீறல்கள் தோலுரிக்கப்பட்டன:
மீறல் 1 (சட்டவிரோத ஊதியப் பிடித்தம்): வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தொழிலாளர்களுக்கு 8 நாட்களுக்கான ஊதியத்தைப் பிடித்தம் செய்து நிர்வாகம் பழிவாங்கியுள்ளது.
மீறல் 2 (பழைய அளவீட்டைக் காட்டி நிவாரண மறுப்பு): புதிய ஊதிய உடன்பாடு எட்டப்படாத நிலையில், புதிய உற்பத்தி அளவுகளைத் தன்னிச்சையாகத் தீர்மானிக்க முடியாது. ஆனால், 2013-ஆம் ஆண்டு போடப்பட்ட ‘சைக்கிள் டைம்’ (Cycle Time) உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு, 13 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு அந்தப் பழைய அளவீட்டின்படி உற்பத்தி கோருவது சட்ட விதிகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிரானது. இந்த 13 வருடப் பழைய உற்பத்தி முறையைக் காரணம் காட்டி, 250 தொழிலாளர்களுக்கு வர வேண்டிய ₹10,000 இடைக்கால நிவாரணத்தை நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது.
மீறல் 3 (அளவுக்கு அதிகமான பணிச்சுமை திணிப்பு): தொழிற்சங்கத்தின் எந்தவொரு ஒப்புதலும் இல்லாமல், டயர் உற்பத்திப் பிரிவின் தரக்கட்டுப்பாடு (Quality) பகுதியில் 19 விநாடிகளில் 729 டயர்கள் என்றிருந்த பரிசோதனை அளவீட்டை, 23 விநாடிகளில் 791 டயர்கள் எனத் தன்னிச்சையாக உயர்த்தி, தொழிலாளர்களால் செய்யவே முடியாத கடுமையான பணிச்சுமையை அவர்கள் மீது திணித்து நிர்வாகம் அடக்குமுறையைக் கையாண்டுள்ளது.
மீறல் 4 (படிநிலைகளைக் குலைத்துச் சம்பள வெட்டு): இடைக்கால நிவாரணம் வழங்கும்போது, தொழிலாளர்களின் பணிமூப்பு (Service) அடிப்படையில் நடைமுறையில் உள்ள 7 படிநிலைகளில் மட்டுமே பிரித்து வழங்கப்பட வேண்டும். அதற்கு மாறாக, ஒருதலைப்பட்சமாக அதை 10 படிநிலைகளாக மாற்றி அமைத்து, தொழிலாளர்களுக்கான சம்பள விகிதத்தைக் குறைத்துக் கைவைத்துள்ளது.
அரசு முன்னிலையில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மீறி நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த 4 பழிவாங்கும் நடவடிக்கைகளும், 1947 தொழிற்தகராறுகள் சட்டம் (Industrial Disputes Act), அட்டவணை 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள நேர்மையற்ற தொழில் நடைமுறைகளுக்கு (Unfair Labour Practices) முற்றிலும் எதிரான சட்டவிரோதச் செயல்களாகும்.
எனவே, எம்.ஆர்.எஃப் நிர்வாகம் தொழில் உறவைப் பாழாக்கும் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும். பரஸ்பர நல்லுறவின் மூலமாக உற்பத்தியைப் பெறுவதும், ஊதியக் கோரிக்கைகளுக்கு நீதிமன்றத் தீர்வுக்குக் கட்டுப்பட்டு நடப்பதுமே சட்டத்திற்கு உட்பட்ட ஒரே வழியாகும் எனத் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
உற்பத்தி இலக்குகளைத் தொழிலாளர்கள் மீது அநியாயமாகத் திணித்து மாதத்திற்கு 7 லட்சத்திற்கும் அதிகமான டயர்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம், 3 ஆண்டுகளாக உழைத்த தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தைக் கொடுக்க மறுப்பதும், அரசின் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தங்களை ஒரு மாதத்திற்குள் காற்றில் பறக்கவிடுவதும் மன்னிக்க முடியாத துரோகம். அரசியலில் ஊழலை எதிர்ப்பது மட்டுமே மக்கள் நலன் ஆகிவிடாது; உழைக்கும் மக்களின் நியாயமான ஊதியமும் பணிப் பாதுகாப்பும் சமூகப் பொருளாதாரத்தின் அச்சாணி. தொழிலாளர் நலத்துறையும் தமிழக அரசும் பெருநிறுவனங்களின் கைக்கூலியாகச் செயல்படுவதை நிறுத்திவிட்டு, உடனடியாகத் தலையிட்டு நிர்வாகத்தின் இந்த ஒப்பந்த மீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்; தொழில் அமைதியைப் பாதுகாக்க வேண்டும்.

Leave a Reply