திருப்பரங்குன்றம் மலை: நூற்றாண்டு கால வழக்குகள் சொல்லும் வரலாற்று உண்மைகள்

திருப்பரங்குன்றம் மலை: நூற்றாண்டு கால வழக்குகள் சொல்லும் வரலாற்று உண்மைகள்

பஞ்சாயத்து 1: குவாரி அமைக்கும் முயற்சிகள்

1879 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலையில் குவாரி அமைக்க மதுரை துணை ஆட்சியர் அனுமதி அளித்தார். 04/04/1879 அன்று குவாரி அமைப்பது குறித்து தேவஸ்தான நிர்வாகத்திடம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. தேவஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்ததால் குவாரி உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.

பிறகு 1885 இல் வனத்துறை சட்டத்தின் மூலம் மலை முழுவதும் பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதி என்று வகைப்படுத்தப்பட்டது.

1904 ஆம் ஆண்டு குவாரி அமைக்க மீண்டும் முயற்சி நடந்தது. மக்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்தியதால் அந்த உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு 1908 ஆம் ஆண்டு அன்றைய மதுரை ஆட்சியர், தென்பரங்குன்றம் குடைவரைக் கோயில் இருக்கும் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும், மலையின் இதரப் பகுதிகளைப் புறம்போக்கு வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அப்போதைய அரசுக்குக் கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்திற்குப் பிறகு குவாரி சம்பந்தமாகத் திருப்பரங்குன்றத்தில் வேறு பிரச்சனை எழவில்லை.

பஞ்சாயத்து 2: மலையின் உரிமைக்கான வழக்கு

உரிமை கோரிய தரப்புகள்: கோயில், அரசு, தர்கா

1917 ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம், பள்ளிவாசல் தர்கா இருக்கும் பகுதிகள் தவிர மொத்த மலையும் தேவஸ்தானத்திற்கே சொந்தம் என்று வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு முதலில் அசல் வழக்கு எண் 101/1917 என்று பதிவாகி, பின்னர் அசல் வழக்கு எண் 06/1918 என மாறி, இறுதியாக அசல் வழக்கு எண் 04/1923 என நீதிபதி இராம ஐயரால் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பிரதானமாக அரசுக்கும் கோயில் நிர்வாகத்திற்கும்தான் பிரச்சனை. ரயில்வே ஸ்டேஷன் கட்ட அரசாங்கம் இடம் கேட்டதால் இரு தரப்புக்கும் இடையே வழக்கு நடந்தது. பிரச்சனை முற்றிய நிலையில், பள்ளிவாசல், தர்கா பகுதிகள் தவிர திருப்பரங்குன்றம் மலை முழுவதும் தேவஸ்தானத்திற்கே சொந்தம் என்று கோயில் தரப்பு உரிமை கொண்டாடியது. தேவஸ்தான தரப்பு மனுவிலேயே, மசூதியும் அதற்குச் செல்லும் பாதையும் இஸ்லாமியர்களின் சொத்துதான் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

பள்ளிவாசல் தரப்புக்கும் தேவஸ்தான தரப்புக்கும் நெல்லித்தோப்பு மற்றும் அதிலுள்ள மண்டபம் சம்பந்தமாக மட்டுமே பிரச்சனை எழுந்தது. நீதிபதி இராம ஐயர் மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். 370-க்கும் மேற்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்து, 21 சாட்சிகளை விசாரித்து, 25/08/1923 அன்று தீர்ப்பு வழங்கினார்.

அவரது நேரடி ஆய்வில், நெல்லித்தோப்பில் பல இஸ்லாமியர்களின் சமாதிகள் இருந்ததும், அங்கிருந்த மண்டபம் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது என்பதும் உறுதியானது. எனவே நெல்லித்தோப்பு, அதிலுள்ள மண்டபம், மண்டபத்திலிருந்து பள்ளிவாசலுக்கு வரும் படிக்கட்டுகள், பள்ளிவாசல் கொடியேற்றும் மலையுச்சி, மக்கள் பயன்படுத்தும் நிலம் ஆகியவை இஸ்லாமியருக்குச் சொந்தம் என்று தீர்ப்பளித்தார். இவை தவிர, காசி விஸ்வநாதர் கோயில் தீர்த்தம் உள்ளிட்ட மீதமுள்ள மலை முழுவதும் தேவஸ்தானத்திற்குச் சொந்தம் என்றும் தீர்ப்பளித்தார்.

குறிப்பாக, இந்த வழக்கில் பள்ளிவாசலுக்குச் சாதகமாகச் சாட்சி கூறிய ஐந்து பேரில் ஒருவர் மட்டுமே இஸ்லாமியர். மற்ற நான்கு பேரும் இந்துக்கள்.

1924 இல் அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 30/03/1926, 28/04/1926 ஆகிய தேதிகளில் மனு விசாரிக்கப்பட்டு, 04/05/1926 அன்று, கோயில் மற்றும் தர்கா பள்ளிவாசல் இடம் தவிர மற்ற இடம் அரசுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அடுத்து, 1930 இல் தேவஸ்தானம் சார்பில் லண்டன் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 12/05/1931 அன்று உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பிரிவி கவுன்சில் ரத்து செய்தது. இந்த மேல்முறையீட்டிலும் பள்ளிவாசலுக்கு எதிராக எந்தக் கோரிக்கையையும் தேவஸ்தான தரப்பு வைக்கவில்லை.

பஞ்சாயத்து 3: சுதந்திரத்திற்குப் பின் எல்லை வரையறை

சுதந்திரத்திற்குப் பின் 1958 ஆம் ஆண்டு, நெல்லித்தோப்புக்கு மேற்கே கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்கா நிர்வாகத்தினர் கற்களை வெட்டிப் புதிதாக மண்டபம் கட்டுகிறார்கள் என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் கோரிக்கை வைத்தது.

இதை விசாரித்த நீதிபதி ஹெண்டர்சன், 02/12/1959 அன்று, கற்கள் வெட்டப்பட்ட பகுதி கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமான இடம் இல்லை என்றும், மண்டபம் கட்டப்படுவதும் நெல்லித்தோப்புக்குள்ளேயே என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

அவர் ஓர் அறிவுரையும் கூறினார். 1923 இல் இராம ஐயர் தீர்ப்பில் கோயில் நிர்வாகத்திற்கும் தர்காவிற்கும் மலையில் உள்ள உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. ஆனால் எல்லை முறையாக வரையறுக்கப்படவில்லை. எனவே ஒரு நீதிபதி ஆணையரை அமைத்து எல்லையை வரையறுத்து, தனி வழக்கு நடத்திப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இதன் அடிப்படையில் 1960 இல் மேல்முறையீடு (90/1960) செய்யப்பட்டது. இரு தரப்பும் ஆணையம் அமைத்து அளவை செய்ய ஒப்புக்கொண்டதால், 12/07/1961 அன்று மேல்முறையீடு முடித்து வைக்கப்பட்டது. 27/09/1964 அன்று ஆணையம் அளவை செய்து, வரைபடத்துடன் அறிக்கை தாக்கல் செய்தது. அதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதால், அதுவரை இருந்த எல்லைப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் 1964 வரை, திருப்பரங்குன்றம் மலை குறித்து நடந்த இந்த உரிமை வழக்குகள் அனைத்தும், மலையில் யாருக்கு எவ்வளவு இடம், யாருக்கு உரிமை என்பதைப் பற்றியவை மட்டுமே. இந்தக் காலகட்டத்தில் மதவெறுப்போடு வழிபாடுகளைத் தடுக்கக் கோரி, அல்லது தர்காவில் கிடா வெட்டுவதை எதிர்த்து, வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

இரு மதத்தவரும் ஒருவரை ஒருவர் மதித்து, ஒருவர் உரிமையை ஒருவர் புரிந்துகொண்டு, பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருப்பரங்குன்றம் மலை மத நல்லிணக்கத்திற்கான அடையாளமாகப் பேசப்படுகிறது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மலையை மதவெறுப்பின் அடையாளமாக மாற்றத் துடிக்கும் RSS சங்பரிவாரக் கும்பலின் அதிகார வெறிதான், திருப்பரங்குன்றம் மலை குறித்து இன்று நடக்கும் இத்தனை குழப்பத்திற்கான காரணம்.

இன்னும் சொல்லப்போனால், திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டும் சொந்தமில்லை. அது சமணர் படுகையாகவும் இருந்திருக்கிறது. அங்கு சமணர்களின் குடைவரைச் சிற்பங்களும் உள்ளன. எனவே திருப்பரங்குன்றம் இயல்பாகவே பல சமயத்தவரும் உரிமை கொள்ளக்கூடிய ஒரு பொதுத் தளம்.

இன்றைய நிலை (நவம்பர் 2026)

சமீப ஆண்டுகளில் இந்த மலை மீண்டும் சர்ச்சையின் மையமாகியுள்ளது. 2025 தொடக்கத்தில் தர்காவில் கிடா வெட்டுவதற்கான தடை தொடர்பாகப் பிரச்சனை எழுந்தது. அதன்பின் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டிய இடம், அதாவது தீபத்தூண் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரை சென்று, இப்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

20 நவம்பர் 2026 அன்று உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சில பகுதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதே நேரத்தில், 24 நவம்பர் அன்று தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற, ஒருமுறை நடவடிக்கையாக, கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தேர்ந்தெடுக்கும் அங்கீகரிக்கப்பட்ட குழு மட்டுமே காவல்துறைப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற வேண்டும். பொதுமக்கள் கூடுவது, ஊர்வலம், போராட்டம், முழக்கம் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. தர்கா, பள்ளிவாசலுக்குச் செல்லும் வழிபாட்டு வழிகளுக்குத் தடை இருக்கக்கூடாது. இந்த அனுமதி தற்காலிகமானது; இது எந்தப் பாரம்பரிய உரிமையையும் நிறுவவில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது.

அங்கு மத அரசியல் செய்ய எந்த அமைப்புக்கும் வாய்ப்பு கொடுக்காமல், மக்களும் தமிழக அரசும் விழிப்போடு இருக்க வேண்டும்.

மேற்கண்ட வழக்கு தொடர்பான தரவுகள் “திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும்” என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டவை.

எழுதியவர் – தோழர் செவ்வீரன்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *