உலகம் முழுதும் ஒரே நோய் – முதலாளித்துவம், ஒரே தீர்வு – சோசலிசம்

அது தற்போதைய மனித நாகரிகத்தின் ஒரு தினசரி நாள். இடம் அரசு மருத்துவமனை. அரசு மருத்துவமனைக்கே உரிய பிரத்தியேகமான சலசலப்பும் அவசரமும். அவசர சிகிச்சை பிரிவில் பிரியா என்கின்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். பிரியாவிற்கு ஒரே ஒரு தாய், தந்தையை பல ஆண்டுகளுக்கு முன்பே கடன் தொல்லைக்கு பலிகொடுத்தாயிற்று. தாய் தற்போது வீட்டு வேலை செய்து கொண்டு மகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.

அப்படியே சற்று சில கிலோமீட்டர்கள் தொலைவில், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் முறையான இன்சூரன்ஸ் போட்டிருந்தால் பயன்படுத்தக்கூடிய ஒரு தனியார் பல்நோக்கு மருத்துவமனை. ஆனால் பாவம் இஎம்ஐ காரணமாக சரிவர இன்சூரன்ஸ் கட்டாததால் கடன் வாங்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மோகன். பின் குறிப்பு: தற்போது தன் மனைவி கடன் வாங்கி இருப்பது மோகனுக்குத் தெரியாது. அரசு மருத்துவமனையில் சரிவர உரிய சிகிச்சை அளிக்க மாட்டார்கள், சாமானிய மக்களுக்கு போதுமான மரியாதை தர மாட்டார்கள் என்பது தன் தாயை தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது தினக்கூலிக்கு வேலை செய்யும் தன் அப்பாவுடன் மோகன் சிறுபிள்ளை பிராயத்தில் அனுபவித்து உணர்ந்த ஒரு பாடம். மோகனுக்கு தற்போது வயது 35 ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள்.

இப்படி வெவ்வேறு இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் இருவரின் உடல் நிலையும் ஏதோ ஒரு சொல்லத் தெரியாத ஊட்டச்சத்துக் குறைபாடினால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

லேசான காற்று உடலை ஒரு கணம் வருடிச் செல்வதைப் போல் பத்து நாட்கள் கடந்தது.

ஒன்றை கவனித்தும் அதற்குரிய பங்களிப்பினை செய்ய முடியாத காரணத்தினால் 35 வயதான மோகன் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டினால் சிகிச்சைப் பலனின்றி இறந்து போனான்.

வேறு பெயரில் உள்ள ஆனால் அதே ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக மோகன் இறந்த மூன்று நாட்களுக்கு முன்பே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரியாவும் இறந்து போயிருந்தாள்.

இருவரும் இறந்த இடம் வெவ்வேறாக இருந்தாலும் இருவர் இறப்பின் காரணம் ஒன்று. “ஊட்டச்சத்து குறைபாடு”

1. முதலில் அந்தக் கேள்வி: ஒரு நாளுக்கு என்ன தேவை?

ICMR-ன் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) 2020-ல் வெளியிட்ட பரிந்துரைகளின்படி, ஒரு நாளுக்குத் தேவையானவை கீழ்வருமாறு.

தேவை (ஒரு நாளுக்கு) ஆண் (65 கிலோ) பெண் (55 கிலோ) 
ஆற்றல் – உட்கார்ந்து செய்யும் வேலை 2,110 கிலோ கலோரி 1,660 கிலோ கலோரி 
ஆற்றல் – மிதமான உடலுழைப்பு 2,710 2,130 
ஆற்றல் – கடின உடலுழைப்பு 3,470 2,720 
புரதம் (உடல் எடைக்கு 0.83 கி/கிலோ) சுமார் 54 கி சுமார் 46 கி 
இரும்பு 19 மி.கி 29 மி.கி 
கால்சியம் 1,000 மி.கி 1,000 மி.கி 

குழந்தைகளுக்கான வயதுவாரி மதிப்புகளும் இதே அறிக்கையில் உள்ளன. வளரும் குழந்தைக்கு, உடல் எடையோடு ஒப்பிட்டால், புரதமும் இரும்பும் கால்சியமும் இன்னும் முக்கியம்.

ஆனால் கலோரியும் புரதமும் மட்டுமே ஆரோக்கியம் அல்ல. 2024-ல் ICMR-NIN வெளியிட்ட “இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டி”யின் ‘இன்றைய தட்டு’ சொல்வது பின்வருமாறு.

குறைந்தது எட்டு உணவுக் குழுக்கள்.

தட்டின் பாதி: காய்கறி, கீரை, பழம் தோராயமாகத் தினம் அரை கிலோ.

மீதம்: தானியம்/சிறுதானியம், பருப்பு-பயறு, முட்டை/இறைச்சி/மீன், கொட்டை-எண்ணெய் விதைகள், பால்/தயிர்.

சமையல் எண்ணெய் 25-30 கிராம், சர்க்கரை 20-25 கிராமுக்குள்.

மேலே சொன்னதன் பொருள், உங்கள் கையிலுள்ள காசுக்கு கிடைப்பதைக் கொண்டு வயிற்றை நிரப்புங்கள் என்பதல்ல. தட்டில் எவற்றைக் கொண்டு வயிற்றை நிரப்ப வேண்டும் என்பதுதான். வயிறு நிறைந்திருந்தும் உடல் பட்டினி கிடக்கும் நிலையை “மறைந்த பசி” என்கிறார்கள். கதையில் பிரியாவையும் மோகனையும் வீழ்த்திய “சொல்லத் தெரியாத குறைபாடு” அதுவாகவே இருக்கக்கூடும்.

இந்தத் தட்டை ஒரு நாள் அல்ல, தினமும், ஆண்டுக்கணக்கில் ஒரு உழைக்கும் குடும்பத்தால் வாங்க முடியுமா? அந்தக் கேள்விதான் இக்கட்டுரையின் தொடக்கம்.

2. உலகம்: உணவு இருக்கிறது, தட்டுக்கு வழி இல்லை

ஐ.நா.வின் ஐந்து அமைப்புகள் (FAO, IFAD, UNICEF, WFP, WHO) ஜூலை 2026-ல் வெளியிட்ட SOFI 2026 அறிக்கையின் முக்கியத் தகவல்கள்:

2025-ல் சுமார் 64.5 கோடி பேர் (உலக மக்கள்தொகையில் 7.8%) பசியால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்தாலும், கொரோனாவுக்கு முந்தைய 2019-ஐ விட இது 6.1 கோடி அதிகம்.

சுமார் 210 கோடி பேர் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் உள்ளனர்.

269 கோடி பேர் (32.7%) சத்தான உணவை வாங்க முடியாதவர்கள். ஒருவருக்கான சத்துணவின் சராசரி நாள் செலவு 2017-ல் 2.94 PPP டாலர்; 2025-ல் 4.28. (PPP டாலர் என்பது நாடுகளுக்கிடையிலான விலை வேறுபாட்டைச் சமன் செய்யும் டாலர்.)

முதன்முறையாக ஆப்பிரிக்கா (30.9 கோடி, 20%) ஆசியாவை (29.2 கோடி, 6%) முந்தி, அதிகப் பசியாளர்கள் வாழும் கண்டமாகியுள்ளது.

2030-லும் சுமார் 52 கோடி பேர் பசியில் இருப்பார்கள் என்பது கணிப்பு. ‘பூஜ்ஜியப் பசி’ இலக்கு எட்டாது போலும்.

குழந்தைகளின் நிலை (UNICEF-WHO-உலக வங்கியின் JME 2025, தரவு 2024): ஐந்து வயதுக்குட்பட்ட 15.02 கோடி குழந்தைகள் வளர்ச்சிக் குன்றலில் (stunting – வயதுக்கேற்ற உயரம் இல்லை), 4.28 கோடி பேர் உயரத்துக்கேற்ற எடையின்மையில் (wasting). இந்த wasting குழந்தைகளில் 70% ஆசியாவில் உள்ளனர்.

SOFI 2026-ன் தலைப்பே கவனிக்கத்தக்க ஒன்று-“சத்துணவின் உயர்ந்த விலையைப் புரிந்து அதைத் தீர்த்தல்”. அதாவது பிரச்சனை உணவு இல்லாதது அல்ல, உணவை வாங்கும் திறன் இல்லாதது.

3. இந்தியா: முன்னேற்றமும் முரண்பாடும்

நேர்மையாகத் தொடங்குவோம், முன்னேற்றம் உண்மையில் உண்மையா?

பட்டினியில் இருப்போர்: 2004-06-ல் 24.39 கோடி (21.1%) பிறகு 2023–25-ல் 14.25 கோடி (9.8%) (SOFI 2026).

தேசியக் குடும்ப நல ஆய்வு NFHS-6 (2023-24 கள ஆய்வு-மே 29, 2026-ல் வெளியீடு): ஐந்து வயதுக்குட்பட்டோரில் வளர்ச்சிக் குன்றல் 35.5%-லிருந்து 29.3%-ஆகக் குறைந்துள்ளது. கடுமையான wasting 7.7%-லிருந்து 5.2%-ஆகக் குறைந்துள்ளது.

ஆனால் அதே அறிக்கைகளில் இன்னொரு பக்கமும் உண்டு:

Wasting 19.3%-லிருந்து 19.0%-ஆகக் குறைந்துள்ளது, கிட்டத்தட்ட மாற்றமே இல்லை. GHI 2026-ன்படி தெற்காசியாவிலேயே இது அதிகம்.

6–23 மாதக் குழந்தைகளில் போதுமான உணவு பெறுவோர் வெறும் 15.3% (NFHS-5-ல் 11%).

பிறந்து ஆறு மாதம் வரை முழுத் தாய்ப்பால்: 63.7%-லிருந்து 55.8% குறைந்துள்ளது.

இரத்தசோகை: NFHS-5-ல் 6-59 மாதக் குழந்தைகளில் 67%, பெண்களில் 57%. NFHS-6 அறிக்கையில் இந்தக் குறிகாட்டிகளே இல்லை. புதிய ஆய்வின் (DABS-I) முடிவுகள் ஜூன் 2026 வரை வெளிவரவில்லை. அதாவது நாட்டின் மிகப் பரவலான ஊட்டச்சத்துப் பிரச்சனைக்கு இன்றுவரை புதிய அதிகாரப்பூர்வ எண் என்பதே இல்லை.

சத்துணவு வாங்க முடியாதோர்: 52.01 கோடி (35.5%). 2017-ல் இது 59.8% ஆக இருந்தது, தற்போது குறைந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் சத்துணவின் செலவு 2017 முதல் சுமார் 48% உயர்ந்து, நபருக்கு நாளொன்றுக்கு 4.11 PPP டாலர் ஆகிவிட்டது.

உலகப் பட்டினிக் குறியீடு (GHI) 2026: 122 நாடுகளில் 100-வது இடம்; மதிப்பெண் 24.1, “தீவிரம்” பிரிவு (2012 முதல் அதே பிரிவு). வங்கதேசம் 19.2, நேபாளம் 14.5, இலங்கை 10.2.

ICMR-இன் கணிப்பு என்பது இந்தியாவின் மொத்த நோய்ச்சுமையில் 56.4% ஆரோக்கியமற்ற உணவால் வருகிறது.

இந்திய அரசு GHI-யின் வழிமுறையை ஏற்பதில்லை. ஆனால் அரசின் சொந்த NFHS ஆய்வே wasting 19% என்கிறது. எந்தக் குறியீட்டைப் பற்றி வாதிட்டாலும் பொருள் ஒன்றுதான்.

முன்னேற்றம் உண்மைதான். ஆனால் அது வயிற்றை நிரப்பியதில் கிடைத்த முன்னேற்றமே தவிற தட்டை நிரப்பியதால் கிடைத்த முன்னேற்றம் அல்ல.

4. காரணங்கள்: மூன்று அடுக்குகள்

ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு UNICEF-ன் புகழ்பெற்ற காரண வரைச்சட்டம் மூன்று அடுக்குகளைச் சொல்கிறது. இந்தியத் தரவுகளை அதில் பொருத்திப் பார்ப்போம்:

1. நேரடிக் காரணங்கள் – போதாத, ஒரே மாதிரியான உணவு (6-23 மாதக் குழந்தைகளில் 15.3% பேருக்கே போதுமான உணவு), அடிக்கடி தொற்று, தாயின் ஊட்டச்சத்துக் குறைவு, இதனால் குறையும் தாய்ப்பால் (55.8%).

2. குடும்ப அளவிலான காரணங்கள் – குறைந்த வருமானமும் உயர்ந்த உணவுச் செலவும். தானியத்தை மட்டுமே நம்பிய தட்டு (இந்திய உணவில் ஆற்றலின் 50-70% தானியத்திலிருந்து வருகிறது. பருப்பு, இறைச்சி, மீன் மூன்றும் சேர்ந்து 6-9% மட்டுமே, ஆனால் பரிந்துரை 14%), சுகாதாரமான குடிநீர், கழிப்பறை, சுகாதாரக் குறைவு, குழந்தையைப் பராமரிக்க நேரமில்லாத அளவு நீளும் தாயின் வேலை நேரமும் மருத்துவச் செலவும்.

3. அடித்தளக் காரணங்கள் – வருமானம், விலைவாசி, வேலை, பொதுச் செலவு ஆகியவற்றை முடிவு செய்யும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு.

முதல் இரண்டு அடுக்குகளைப் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம்: “அம்மா சரியாக உணவு கொடுக்கவில்லை”, “மக்களுக்கு உடல்நலம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை” என்று. மூன்றாவது அடுக்கைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை, முதலில் ஒன்றைப் பற்றிப் பெரிதாகச் சிந்தித்தால் தானே அதைப் பற்றி பேசுவதற்கு. இவற்றைப் பற்றியெல்லாம் ஆழமாகச் சிந்தித்து அதற்கெதிராகச் செங்கொடி பிடித்தும் கோஷமிட்டும் ஒரு கூட்டம் தெருவில் கத்திக்கொண்டிருக்குமே அதையாவது கேட்டதுண்டா?

ஆனால் இது நம் தவறல்ல. நம்மை நாமே குறை சொல்லிக் கொண்டும், நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொண்டும் இருந்தால்தான் பிரச்சனைகளுக்கு மூலக் காரணமானவர்களை நாம் பார்க்கத் தவறுவோம். அவர்களும் நைசாக தப்பி விடுவார்கள். அதைத்தான் அவர்கள் இத்தனை ஆண்டு காலமாக நம்மைச் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

5. “பார்த்தும் ஓட முடியாத” மக்கள்

கதையில் மோகன் தனக்கு நடக்கும் ஒன்றைக் கவனிக்கிறான். ஆனால் அதற்காக எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். இது அவனுடைய பலவீனமோ அலட்சியமோ அல்ல. இதற்குக் உண்மையானக் காரணங்கள் மோகனுக்கு மட்டுமல்ல நமக்கும் உண்டு.

நேரத்தின் வறுமை. உழைப்புச் சக்தியை விற்றே வாழ வேண்டியிருக்க, நாளின் பெரும்பகுதி ஏற்கனவே விற்கப்பட்டுவிடுகிறது. சத்துணவைத் தேடி வாங்க, சமைக்க, குழந்தையின் உயரத்தை அளக்க, அங்கன்வாடிக்குச் செல்ல நேரம் யாருக்கும் மிச்சமிருப்பதில்லை.

ஒவ்வொரு கவனத்துக்கும் ஒரு விலை. ஒரு நாள் வேலை போனால் ஒரு நாள் உணவு போகும். “கவனிப்பதற்கான” செலவை ஏழை தனியாகவே சுமக்க வேண்டியிருக்கிறது.

மருத்துவம் ஒரு சந்தைப் பொருள். 2022-23-ல் இந்தியாவின் மொத்த சுகாதாரச் செலவில் 43.4% மக்களின் சொந்தப் பாக்கெட்டிலிருந்தே வந்தது. ஆனால் அரசின் பங்கோ GDP-யில் 1.43% மட்டுமே. மோகனின் காப்பீடு EMI-யால் தவறியதயால் சிகிச்சை கடனில் நடந்தது ஆனால் நல்லவேளை அந்தக் கடன் பற்றி அவனுக்குத் தெரியாமலே போனது. நோய் – கடன் – குறைந்த உணவு – மீண்டும் நோய் என்ற சுழற்சி இப்படித்தான் மனிதரை இறுக்குகிறது. கடன் தொல்லையில் தந்தையை இழந்த பிரியாவின் கதையும் அதே சுழற்சியின் இன்னொரு முனைதான்.

பழி தனிமனிதர் மேல் விழுகிறது. “நீ உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தந்து சரியாகச் சாப்பிடவில்லை” என்ற ஒரு வாக்கியம், ஒரு சமூகத்தின் பிரச்சனையையே ஒரு தனிநபரின் தலையில் கட்டி, அதை அவரின் தனிப்பட்ட பிரச்சனையாகவும், குறையாகவும் மாற்றிவிடுகிறது.

சேவை செய்பவர்களும் ஏழைகள். அங்கன்வாடிப் பணியாளருக்கு மாதம் ₹4,500, உதவியாளருக்கு ₹2,250 என்ற மதிப்பூதியத்தை நாடாளுமன்றக் குழு ஒன்று “மிகவும் சொற்பம்” என்று சுட்டிக்காட்டியது. நாட்டின் சத்துணவுத் திட்டத்தின் முதுகெலும்புக்கே போதுமான ஊதியம் இல்லை என்பதே இங்குள்ள கள எதார்த்தம்.

மார்க்சிய மொழியில் இதை அந்நியமாதல் என்பார்கள். வாழ்வதற்கான ஓட்டமே ஒருவரின் ஆற்றல் முழுவதையும் உறிஞ்சிவிடும்போது, அந்த வாழ்க்கையையே மாற்றும் கூட்டுச் செயலுக்கு ஆற்றல் மிஞ்சுவதில்லை. இப்படி நாம் எல்லோருமே ஓடிக்கொண்டே இருப்பது இயற்கையானதல்ல, அது ஒரு சீழ்பிடித்த அமைப்பின் விளைவு.

6. பொருளாதார அடித்தளம்

பசி உற்பத்திப் பிரச்சனை அல்ல; வாங்கும் சக்திப் பிரச்சனை
ஜூலை 1, 2026 நிலவரப்படி மத்தியத் தொகுப்பில் உள்ள நெல்-கோதுமை இருப்பு 925.85 லட்சம் டன், விதிக்கப்பட்ட இருப்பு அளவு 411.20 லட்சம் டன். அதாவது இரு மடங்குக்கும் மேல். ஆனால் அதே நாட்டில் 35.5% பேர் சத்துணவை வாங்க முடியாதவர்கள். காரணம் எளிமையானது, முதலாளித்துவத்தில் பசி ஒரு சமூகத் தேவையாக இருந்தாலும், வாங்கும் சக்தி இல்லாதவர்களின் பசி சந்தையின் ‘தேவையாக’ அங்கீகரிக்கப்படுவதில்லை.

பொருளாதார அறிஞர் உத்சா பட்நாயக் இதையே வாதிடுகிறார். 1991-2003 காலத்தில் இந்தியரின் ஆண்டு உணவுத்தானிய நுகர்வு தலா 177 கிலோவிலிருந்து 155 கிலோவாகக் குறைந்தது என்பது அவர் கணக்கு. 2017-18 நுகர்வுத் தரவு நேரடியாக வெளியிடப்படாத நிலையில், கசிந்த தரவை வைத்து கிராமப்புறத்தில் சுமார் 80% பேர் ஊட்டச்சத்து அளவுகோலை எட்டவில்லை என்று அவர் மதிப்பிடுகிறார். இவை விவாதத்துக்குரிய மதிப்பீடுகள். அடிப்படைத் தரவு வெளிவராததும் அந்த விவாதத்தின் ஒரு பகுதியே என்பது குறிப்பிடத்தக்கது.

உழைப்புச் சக்தியின் மதிப்பு
மார்க்சின் விளக்கப்படி, ஒரு தொழிலாளியின் உழைப்புச் சக்தியின் மதிப்பு, அவரையும் அவர் குடும்பத்தையும் உயிருடன் வாழ வைக்கத் தேவையான வாழ்வாதாரப் பொருட்களின் மதிப்பு. அதில் சத்துணவும் அடங்கும். ஊதியம் அதைவிடக் குறைவாக இருந்தால் என்ன நடக்கும்? தொழிலாளியும் அவர் குழந்தைகளும் குறைபட்ட நிலையிலேயே வளரும்படி நிர்பந்திக்கப்படுவர். 52 கோடி என்ற எண், அந்த இடைவெளியின் ஒரு அளவுகோல். முதலாளிகளுக்கு விலை மலிவான உழைப்புதான் லாபத்தைத் தருகிறது. ஆனால் அந்த மலிவின் விலையை குழந்தைகள் உடல் வளர்ச்சி குறைபாட்டாலும் இரத்தசோகையாலும் ஈடுசெய்கின்றனர்.

செல்வம் யாரிடம்?
உலக சமத்துவமின்மை அறிக்கை 2026: இந்தியாவின் மொத்தச் செல்வத்தில் சுமார் 40% மேல் 1% பணக்காரன்களிடம் குவிந்துள்ளது. 65% மேல் 10% பேரிடம் குவிந்துள்ளது. நாட்டின் மொத்த வருமானத்தில் 58% மேல் 10% பேருக்குச் செல்கிறது. ஆனால், மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் கீழ்மட்ட 50% பேருக்குக் கிடைப்பது வெறும் 15% வருமானம் மட்டுமே.

Wealth Tracker India 2026 – நிதிப் பொறுப்புக்கூறல் மையம் + Tax the Top இயக்கத்தின் ஆய்வின்படி, இந்தியாவில் செல்வம் மிகச் சிலரிடமே அதிகமாகக் குவிந்து வருகிறது. 2019-ல் நாட்டின் மொத்த செல்வத்தில் மேல் 1% மக்களின் பங்கு 36.5% இருந்தது; அது 2022 முதல் 40.1% ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கீழ் 50% மக்களின் செல்வப் பங்கு 6.8%-இலிருந்து 6.4% ஆக குறைந்துள்ளது. மேலும், நாட்டின் முதல் ஐந்து பெருங்கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 400% அதிகரித்துள்ளது.

உலக அளவில்: மேல்மட்ட 10% பேரிடம் செல்வத்தின் முக்கால் பங்கும் கீழ்மட்ட 50% பேரிடம் 2% மட்டுமே உள்ளது.

Oxfam இந்தியா (2023) அறிக்கை கோடீஸ்வரன்கள் மீது ஒரே ஒருமுறை 2% வரி விதித்தால் கிடைக்கும் தொகையை வைத்துக்கொண்டு ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளோருக்கான மூன்றாண்டுத் தேவையான ₹40,423 கோடியை ஈடுகட்டலாம் என்றுத் தெரிவிக்கிறது.

அரசின் செலவுகளில் எதற்கு முன்னுரிமை?

இலவசத் தானியத் திட்டம் (PMGKAY) கீழ் 2026-27-ஆம் ஆண்டில் ₹2,27,429 கோடி ஒதுக்கப்பட்டு, சுமார் 81.35 கோடி மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ தானியம் வழங்கப்படுகிறது. இது கோடிக்கணக்கான மக்களின் பசியைப் போக்க உதவுகிறது. நிச்சயமாக மதிக்கப்பட வேண்டிய நடவடிக்கை. ஆனால்

Saksham Anganwadi & Poshan 2.0: சத்துணவின் மையத் திட்டத்துக்கு ₹23,100 கோடி-தானியத் திட்டத்தின் சுமார் பத்தில் ஒரு பங்கு. பிப்ரவரி 2026 தரவுப்படி இந்தத் திட்டத்தில் ₹6,352 கோடி மாநிலக் கணக்குகளிலிருந்து செலவழிக்கப்படாமல் கிடந்தது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சிப் பொருளாதார நிபுணர் தீபா சின்ஹா சொல்வது போல், கடந்த பத்தாண்டுகளில் இத்துறைகளுக்கான ஒதுக்கீடு நிலையாகவும், உண்மை மதிப்பில் குறைந்தும்தான் இருக்கிறது. அங்கன்வாடி உணவுச் செலவு நெறிமுறை 2017-க்குப் பிறகு திருத்தப்படவில்லை என்கிறது அங்கன்வாடி ஊழியர் சம்மேளனம்.

சுகாதாரம்: அரசின் செலவு GDP-யில் 1.43% (2022–23). நான் படித்துவரை இதன் பொருள் கலோரியைத் தானியமாகக் கொடுப்பது மலிவானது, ஆனால் புரதம், நுண்ணூட்டம், தாய்-சேய் பராமரிப்பு, மனிதர்களின் உழைப்புக்கும் செலவுக்கும் தேவைப்படுபவை என அவற்றுக்கெல்லாம் குறைவான ஒதுக்கீடு. ஆக அரசு பசியைத் தணிக்கிறதே தவிற ஊட்டச்சத்தை உறுதி செய்வதில்லை.

உணவுச் சந்தையின் லாபத் தர்க்கம்
ICMR-NIN சொல்வது என்னவெனில், கொழுப்பு-சர்க்கரை-உப்பு மிகுந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியமான உணவை விட மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன. ஆக்ரோஷமான, மனதைக்கிறங்க வைக்கும் விளம்பரம் குழந்தைகளையும் பாதிக்கிறது. குடும்ப வருமானத்தின் பெரும் பகுதி இவற்றுக்கே செல்கிறது. அதனால் “இரட்டைச் சுமை”தான் மிச்சம். ஒரு பக்கம் குறைபாடு, மறு பக்கம் உடல்பருமனும் உயர் இரத்தச் சர்க்கரையும். சந்தை எது லாபமோ அதை மட்டுமே விற்கும், எது ஊட்டமோ, சத்தானதோ அதை விற்காது.

உலகளாவிய அழுத்தங்கள்
SOFI 2026 அறிக்கையின்படி, போர்கள், காலநிலைப் பேரிடர்கள், எரிசக்தி மற்றும் உரங்களின் விலை உயர்வு ஆகியவை உலகளாவிய உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கின்றன. 2030-ஆம் ஆண்டில் பசியால் பாதிக்கப்படுவோர் 50.3 கோடியாக இருப்பார்கள் என்ற முந்தைய கணிப்பு, தற்போது 51–52 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தகைய நெருக்கடிகளால் ஏற்படும் பாதிப்புகள், ஏற்கெனவே வறுமையில் வாழும் மக்களின் மீதே அதிகம் விழுகின்றன. ஆனால் பெருமுதலாளிகளின் நிலையோ போன வருடத்தைவிட இவ்வருடம் மேலே உயருகிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் செழித்தோங்க, விரக்கேற்ற வீக்கமென வாழுந்து மடியும் பல லட்சம் கோடி உழைக்கும் மக்கள்.

7. தீர்வு: தட்டை நிரப்பும் திட்டமா?

என் அறிவுக்கு எட்டிய யோசனைகளையும் மாற்று வழிகளையும் முழுவதுமாக எழுதினேன், பிறகு கிழித்தெறிந்துவிட்டேன்.

காரணம், மக்களின் மீதும் இச்சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட என்போன்ற ஒரு சாதாரண நபராலேயே இவ்வளவையும் படித்து சிந்தித்துப் பல தீர்வுகளை முன்வைக்க முடிகிறது. எனினும் உண்மையில் இப்பிரச்சனைகள் சார்ந்த துறைகளில் நிபுணர்களாகவும் வல்லுனர்களாகவும் அறிஞர்களாகவும் இருக்கக்கூடிய பல நூறு பேர்கள், பிரச்சனைகளின் பிரத்யேகமான அம்சங்களுக்கு ஏற்றார்போல் பல நூறு வழிகளையும், யோசனைகளையும், திட்டங்களையும் ஏற்கனவே முன்வைத்திருந்த போதிலும், எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றமும் சமூகத்தில் நிகழாமல், அதற்கு நேர் மாறாக, போகப் போக நிலைமைகள் படுமோசமாகி வருவதற்கான ஒற்றைக் காரணம் என்ன என்பது ஒரு கணத்தில் என் நெஞ்சை திக்குமுக்காடச் செய்தது.

உண்மையில் நாம் வாழும் இச்சமூகம் யாருக்கானது? உண்மையில் இந்த அரசும் அரசமைப்பும் அது தூக்கிப் பிடிக்கும் ஜனநாயகமும் யாருக்கானது? அது உண்மையில் மக்களுக்கானதாக இருந்திருக்குமாயின் இப்பிரச்சனைகள் என்றோ எப்போதோ தீர்வுகள் கண்டிருக்கும்.

ஆதரவற்ற தாயின் ஜந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே பிள்ளை பிரியாவோ, தன் மனைவி, இரு பிள்ளைகளை விடுத்து வேறு சொத்தெதையும் சேர்க்காத, குடும்பத்தின் ஒரே சம்பளக்காரனான மோகனோ லாபவெறி கொண்ட முதலாளித்துவத்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இவர்களைப் போல் பல நூறு கோடி மக்கள் உயிர்விட்டும், உயிர் விடும் நிலையில் வைக்கப்பட்டுக் கொண்டும் இருக்கமாட்டார்கள்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் எழுதப்படுவது “ஊட்டச்சத்துக் குறைபாடு”என்றோ வேறு சில காரணமென்றோ கூட இருக்கலாம். ஆனால் அதற்கு முன்னால் எழுதப்படாத காரணங்கள் பல உள்ளன. கடன், குறைந்த ஊதியம், விலைவாசி உயர்வு, சுகாதாரமின்மை, சத்தில்லாத உணவு, பட்ஜெட்டில் வெட்டப்பட்ட பொதுச் செலவு, பெரும்பணக்காரன்களுக்கு பெரிதாக வரிவிதிக்காத பட்ஜெட், முதலாளித்துவத்தை மையமாகக் கொண்ட திறந்தவெளிச் சந்தை, மற்றும் முழுக்க முழுக்க லாபவெறியை மையமாகக் கொண்ட முதலாளித்துவம்.

எதார்த்தத்தில் மனித இனத்திற்கு அடிப்படையில் தேவையானது தான் என்ன? மேலே குறிப்பிட்டதைப் போல தட்டில் மூன்று வேளை உண்ண சத்தான உணவு, உடுத்த தரமான உடை, வாழ்வதற்குத் தேவையான இருப்பிடம், சமூகப் பாதுகாப்புடன் கூடிய நிலையான ஒரு வேலை இவ்வளவுதானே? இத்தனை ஆண்டுகால அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சிகளுக்குப் பிறகும், இந்த உயிர்வாழ்வதற்கான அடிப்படைகளைக் கூடத் தரமுடியாத ஒரு அரசும், அந்த அரசின் அடிப்படையான-லாப நோக்கில் இயங்கும் இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையும் தூக்கியெறியப்பட வேண்டாமா? மக்களுக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி அவற்றைப் பூர்த்தி செய்யும் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை உள்ளடக்கிய ஒரு சோசலிச உற்பத்தி முறையை, சோசலிச அரசை கட்டமைக்க வேண்டாமா? சட்டங்களும், திட்டங்களும், சீர்திருத்தங்களும் தற்காலிகமானவை. ஆனால் பிரச்சனைகளின் குறிப்பறிந்த சமரசமற்ற போராட்டங்களும், ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியும் மட்டுமே அனைவரும் உண்மையில் உரிமைகொள்ளும் ஒரு சோசலிச அரசாங்கத்தை நிறுவ உதவும். அதற்கான பாதையில் அனைவரும் ஒன்றுபடுவோம்! வெல்லுவோம்! பாட்டாளி வர்க்கப் புரட்சி ஓங்கும்!

தோழமையுடன்,
எரன்


தரவு மூலங்கள் – உலகளவில்
⦁ SOFI 2026 (FAO, IFAD, UNICEF, WFP, WHO): https://doi.org/10.4060/cd8306en
⦁ SOFI 2026 சுருக்கம் / FAO செய்தி: https://www.foodsecurityportal.org/node/3932
⦁ SOFI 2026 — IISD SDG Knowledge Hub: https://sdg.iisd.org/news/hunger-food-insecurity-down-but-regional-progress-uneven-sofi-2026/
⦁ UNICEF–WHO–உலக வங்கி JME 2025: https://www.who.int/teams/nutrition-and-food-safety/monitoring-nutritional-status-and-food-safety-and-events/joint-child-malnutrition-estimates/latest-estimates
⦁ JME 2025 சுருக்க நூல்: https://data.unicef.org/wp-content/uploads/2025/07/JME-Brochure-2025.pdf
⦁ உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (செய்தி): https://scroll.in/latest/1089182/scroll_in

இந்தியா — ஊட்டச்சத்து, பட்டினி
⦁ SOFI 2026 இந்தியத் தரவு (Drishti IAS): https://www.drishtiias.com/daily-updates/daily-news-analysis/the-state-of-food-security-and-nutrition-in-the-world-2026
⦁ SOFI 2026 இந்தியத் தரவு (Khan Global Studies): https://currentaffairs.khanglobalstudies.com/the-state-of-food-security-and-nutrition-in-the-world-sofi-2026/
⦁ உலகப் பட்டினிக் குறியீடு (GHI): https://www.globalhungerindex.org/India.html
⦁ GHI 2026 செய்தி: https://thesouthfirst.com/health/india-ranks-100th-in-global-hunger-index-behind-bangladesh-nepal-and-sri-lanka/
⦁ GHI 2026 செய்தி: https://www.nationalheraldindia.com/national/india-global-hunger-index-2026-rank-child-wasting-malnutrition
⦁ NFHS-6 முடிவுகள்: https://www.business-standard.com/health/nfhs-6-child-malnutrition-vaccination-institutional-births-adequate-diet-india-126060101569_1.html
⦁ NFHS-6 vs NFHS-5 ஒப்பீடு: https://anantamias.com/nfhs-6/
⦁ NFHS-6 — குழந்தைகளின் உணவுத் தரம்: https://insights.dataful.in/articles/nfhs-6-shows-indias-children-are-surviving-more-but-eating-poorly
⦁ NFHS-6 — இரத்தசோகைத் தரவு இல்லாமை: https://www.asianage.com/opinion/columnists/dev-360-indias-child-health-whats-measured-whats-missing-patralekha-chatterjee-1961609

உணவுப் பரிந்துரைகள்
⦁ ICMR-NIN RDA 2020 குறிப்பு: https://www.nin.res.in/rdabook/brief_note.pdf
⦁ ICMR-NIN உணவு வழிகாட்டி 2024: https://main.icmr.nic.in/sites/default/files/upload_documents/DGI_07th_May_2024_fin.pdf
⦁ வழிகாட்டிச் செய்தி (ThePrint): https://theprint.in/health/keep-infants-away-from-sugar-500g-fruit-veg-daily-new-national-dietary-guidelines-after-13-yrs/2076258
⦁ FSSAI வலைப்பதிவு: https://blogs.fssai.gov.in/blog12.php

பொருளாதாரம், பொதுச் செலவு
⦁ தானிய இருப்பு (ஜூலை 2026): https://www.businesstoday.in/latest/economy/story/global-food-security-faces-fresh-risks-but-indias-grain-buffer-offers-a-cushion-560357-2026-10-08
⦁ PMGKAY ஒதுக்கீடு (PRS): https://prsindia.org/files/budget/budget_parliament/2026/DfG_Analysis_2026-27-Food.pdf
⦁ பட்ஜெட் 2026–27 சமூகத் துறை: https://www.outlookindia.com/national/union-budget-2026-social-sector-funding-shows-hardly-any-gains
⦁ செலவழிக்கப்படாத நிதி: https://www.business-standard.com/economy/news/unspent-funds-states-sna-accounts-css-budget-2026-27-126020501200_1.html
⦁ அங்கன்வாடி மதிப்பூதியம்: https://theprint.in/india/how-has-mnrega-to-g-ram-g-shift-impacted-anganwadis-house-panel-flags-a-funding-problem/2888472
⦁ அங்கன்வாடி சம்மேளனம் — உணவுச் செலவு நெறிமுறை: https://www.newsclick.in/node/59518
⦁ தேசிய சுகாதாரக் கணக்குகள் 2022–23: https://www.indianpharmapost.com/policy/lite/indias-healthcare-spending-triples-to-rs-385-lakh-crore-over-the-last-decade-20375
⦁ Wealth Tracker India 2026: https://www.thenewsminute.com/news/wealth-of-indias-top-five-billionaires-rose-400-in-six-years-report
⦁ Oxfam இந்தியா — 2% வரி மதிப்பீடு: https://india.entrepreneur.com/news-and-trends/richest-1-indians-own-more-than-40-of-countrys-wealth/442981
⦁ உத்சா பட்நாயக் (The Wire): https://thewire.in/economy/using-false-statistics-to-claim-zero-poverty-helps-nobody
⦁ உத்சா பட்நாயக் (Scroll): https://scroll.in/article/1084591/scroll_in
⦁ உத்சா பட்நாயக் — உணவுத்தானிய நுகர்வு: https://archives.peoplesdemocracy.in/2005/0605/06052005_eco.html
⦁ PDS விரிவாக்கச் செலவு மதிப்பீடு: https://janataweekly.org/?p=14485
⦁ தமிழ்நாட்டு உணவுத் திட்டங்கள்: https://www.civilsdaily.com/news/tamil-nadus-breakfast-scheme-in-schools/

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *