தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடக்கமும் பயணமும்…
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) தமிழ்நாட்டில் 2007-ஆம் ஆண்டு மே 16-ஆம் நாள் தொடங்கப்பட்டது.
அது என்ன தீண்டாமை ஒழிப்பு முன்னணி?

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தீண்டாமை அறவே ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், கள யதார்த்தம் என்பது வேறு மாதிரி இருக்கிறது. அதனால் தான் இந்த இயக்கத்திற்கு ‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்வியக்கத்தின் முதல் மற்றும் மிக முக்கியமான போராட்டம் உத்தப்புரம் போராட்டமாகும். உத்தப்புரத்தில் பொதுச் சாலையில் தலித் மக்கள் நுழையாதபடி தீண்டாமைச் சுவர் ஒன்று கட்டப்பட்டிருந்தது. 1989-இல் கட்டப்பட்ட இந்தச் சுவரைத் தகர்க்க எண்ணற்ற முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலும், இப் பிரச்சினையைத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையில் எடுத்தது. தமிழக ஊடகங்களில் இந்தச் சுவர் பற்றிய செய்தி பரவலாக வெளிவந்தது என்றால், அதற்கு முக்கியக் காரணம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகும். இந்தச் சுவரை அப்புறப்படுத்தக் கோரி பல போராட்டங்களைத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் (CPI-M) பங்களிப்பு மகத்தானது.
இந்தச் சுவரைப் பார்வையிட சிபிஎம் பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் வருகை தருகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதுவரை செயல்படாத தமிழக அரசு, அவர் வருவதற்கு முன்பாகவே மிக வேகமாகச் செயல்பட்டுச் சுவரின் ஒரு பகுதியை அப்புறப்படுத்தியது. தலித் மக்கள் அந்த ஊரின் பொதுப் பாதையில் நடந்து செல்லவும் பயன்படுத்தவும் வழிவகுத்தது. அதன் பின்னர், சாதிய சக்திகள் பொதுப் பாதையைப் பயன்படுத்துவதற்குப் பல இடையூறுகள் செய்தபோதிலும், சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சிகளால் அவை முறியடிக்கப்பட்டன.
உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் நுழைவுப் போராட்டம் பல அடக்குமுறைகளை எதிர்த்து வெற்றிகரமாக நடந்தது. இப் பிரச்சினைகளின் போது டி.கே. ரங்கராஜன் உட்படப் பல முக்கியத் தோழர்கள் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தடியடிக்கும் கைதுக்கும் ஆளாயினர் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். உத்தப்புரம் மக்களின் நீண்டகாலக் கனவான நிழற்குடை அமைக்கும் பணியும் தடையைத் தாண்டி நிறைவேற்றப்பட்டது. உத்தப்புரம் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, முழு இந்தியாவிற்குமே தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அடையாளமாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை. இக்காலத்தில் உத்தப்புரம் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, ரூ.15 லட்சம் வரை நிவாரணம் பெற்றுத் தரப்பட்டது.
கள ஆய்வுகளும் போராட்டங்களும்
தமிழகம் முழுவதும் 1,845 கிராமங்களில் களஆய்வு நடத்தி 85 வகையான தீண்டாமை வடிவங்களையும், 28 வகையான வன்கொடுமைகளையும் அடையாளம் கண்டு அம்பலப்படுத்தியது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இன்று இந்தியா முழுவதும் உள்ள சமூக ஆய்வாளர்கள் இந்த ஆய்வு விவரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இது வெறும் கள ஆய்வு மட்டுமல்ல, களப்போராட்டங்களின் கூர்மையான கருவியாகும்.
தீண்டாமை நிலவும் பல கிராமங்களைத் தேர்வு செய்து, தலித் மக்களோடு சேர்ந்து இதர ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டிப் பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட, தலித் மக்கள் நுழைய முடியாத ஆலயங்களில் வெற்றிகரமாக ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் நாள் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தை ஒட்டி, பல்வேறு கிராமங்களில் தீண்டாமைக்கு எதிரான களஆய்வுப் போராட்டங்களை நடத்தி வருகிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி உத்தமபுரத்தில் மட்டுமல்ல, காங்கேயனூர், கூத்தடிச்சம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் தலித் மக்களின் உரிமைக்காகப் போராடி, காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு சிறைவாசம் அனுபவித்தது. சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்களும் ஊழியர்களும் இதில் பெரும் பங்காற்றியுள்ளனர்.
பெரிய போராட்டங்கள் மட்டுமல்லாது, பஞ்சமி நில மீட்பு, பழங்குடி மக்களுக்கு திட்ட நிதி (TSP) மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டுச் செலவிடப்படுவது, குடிமனைப் பட்டா பெறுவது, சென்னை போன்ற மாநகரங்களில் நீண்டகாலமாகக் குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கு எதிராகத் தலையிடுவது, மாணவர்களிடையே சாதிய மோதல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டறிவது, தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களைப் பணியாற்ற விடாமல் தடுக்கும் பிரச்சினைகளுக்கு எதிராகத் தலையிடுவது என எண்ணற்ற இயக்கங்களை நடத்தியுள்ளது தீண்டாமை ஒழிப்பு முன்னணி. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகவும் இயக்கங்களை நடத்தி வரும் உத்தியை சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தேர்ந்தெடுத்துள்ளது.
சமீபத்திய கள ஆய்வுகள்
2022 ஆகஸ்ட் 12 ஆய்வு:
24 மாவட்டங்களில் உள்ள 38 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட கள ஆய்வில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. சில பஞ்சாயத்துத் தலைவர்களுக்குத் தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது; 22 பஞ்சாயத்துகளில் அவர்கள் நாற்காலியில் அமர அனுமதிக்கப்படவில்லை; அதேசமயம் 42 பஞ்சாயத்துகளில் அவர்களின் பெயர் பலகை வைக்க அனுமதிக்கப்படவில்லை. 17 பஞ்சாயத்துகளில் தலித் பெண் தலைவர்கள் பாலின பாகுபாட்டையும் சேர்த்து எதிர்கொள்வதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
2023 டிசம்பர் (பள்ளிகளில் சாதிய பாகுபாடு ஆய்வு:
441 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மாநிலத்தில் உள்ள கணிசமான பள்ளிகளில் மாணவர்களிடையே சாதிய அடிப்படையிலான வன்முறையும் பாகுபாடும் பரவலாக நிலவுகிறது எனத் தெரியவந்தது. 36 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 321 அரசுப் பள்ளிகள், 58 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 62 தனியார் பள்ளிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் 333 சிறுவர்கள், 311 சிறுமிகள் என மொத்தம் 644 மாணவர்களிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள்; அதே சமயம் சுமார் 10% மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
ஆய்வின்படி ராமநாதபுரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 25 பள்ளி மாணவர்களிடையே சாதிய வன்முறை பதிவாகியுள்ளது. குறைந்தது 23 பள்ளிகளில் மாணவர்கள் சாதிய உணர்வுகளைத் தீவிரமாக வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் 10 பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் சாதியின் அடிப்படையில் தனித்தனி குழுக்களாக இயங்குகின்றனர். கடலூர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 20 மாவட்டங்களில், மாணவர்கள் தங்கள் சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வண்ணக் கைக்கட்டைகள், பொட்டுகள், நூல்கள் மற்றும் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்துகின்றனர். இது போன்ற சாதியக் குறியீடுகளில் மேலும் 32 வகைகளை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. 15 பள்ளிகளில் தலித் மாணவர்கள் கழிப்பறைகளைக் கழுவ வைக்கப்படுகிறார்கள். அதேசமயம் 6 பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் சாதியின் அடிப்படையில் தனித்தனி வரிசையில் நின்று மதிய உணவு பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். 4 பள்ளிகளில் மதிய உணவு உண்ணும் அறைகள் சாதியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. குறைந்தது 3 பள்ளிகளிலாவது ஆசிரியர்களிடையே சாதிய அடிப்படையிலான பாகுபாடு நிலவுவதாகவும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம்
2017-ஆம் ஆண்டு தோழர் கே. சாமுவேல் ராஜ் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு தொடர் நடைபயணத்தை மேற்கொண்டது ததீஒமு. சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் நிறைவேற்றக்கோரி இன்றுவரை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இடதுசாரி செயல்பாட்டாளர்கள் அனைவரும் பலமான போராட்டங்களையும், பலவிதமான கள ஆய்வுகளையும் மேற்கொண்டு அரசிடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.
வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் காண முடியாதபடி, தனது கட்சித் திட்டத்திலேயே “தலித் மற்றும் பழங்குடி மக்களின் உரிமைக்கான போராட்டம் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்த இயக்கத்தை மக்கள் ஜனநாயகப் புரட்சியின் முக்கியக் கடமை” என வரையறுத்துள்ளது சிபிஎம் கட்சி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சமூகப் பிரச்சினையையும் சமூகச் சீர்திருத்த இயக்கத்தையும் இணைத்துச் செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மரபை நிலைநாட்டும் வகையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களைச் சிபிஎம் கட்சி எதிர்காலத்திலும் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்லும்.
தொகுப்பு : இளவரசன் SP

Leave a Reply