ஒரு தொழிலாளியின் மூலதனம் நூல் வாசிப்பு அனுபவம்.

மூலதன நூல் வாசிப்பு அனுபவம். தொடர்

என்னுடைய பெயர் ஜோதி வெங்கடேஸ்வரன் வெ . BHEL நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.தொழிற்சங்கத்தில் உறுப்பினராக 16 ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறேன்.

2010 ஆம் ஆண்டிலிருந்து தொழிற்சங்க உறுப்பினராக இருப்பதால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருந்தேன். எப்போதுமே தொழிலாளி வர்க்கம் போராடி போராடி தான் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளையே தீர்த்துக் கொள்ள வேண்டுமா?

ஏன் தொழிலாளி வர்க்கத்துக்கு உண்டான அவர்களின் உழைப்புக்கு உண்டான ஊதியம் கிடைக்காமல் தொடர்ந்து போராட்டத்தின் மூலமாக கூட நிறைவேற்றுவதிலும் பெரும் சிக்கல் ஏற்படுகிறது என்பதை எல்லாம் தொழிற்சங்க உறுப்பினரான பின் அனுபவங்களின் வாயிலாக என்னை யோசிக்க வைத்தது.

இந்த கட்டத்தில் இதையெல்லாம் உற்றுநோக்கிக்கொண்டிருந்த என்னுடன் பணிபுரியும் சக தோழர் சிலம்பரசன் ஓர் அறிவுரையை வழங்கினார். இதற்கெல்லாம் பதில் வேண்டும் என்றால் தோழர் கார்ல் மார்க்ஸின் மூலதன நூலை முழுமையாக வாசிக்க முன்வர வேண்டும் என வழிகாட்டுதலை உருவாக்கித் தந்தார்.

தோழர் சிலம்பரசன் ஏற்கனவே மூலதன நூலின் முதல் பாகத்தை வாசித்து முடித்தவர். அவர் இந்த முதலாளித்துவ சமூகத்தின் நிலைமையை பற்றி முதல் பாகம் வாசித்ததன் மூலமாக சிந்தித்து தெரிந்து கொண்டு அனுபவத்தின் வாயிலாக எனக்கு அறிவுறுத்தலையும் வழிகாட்டுதலையும் செய்தார்

’’எனக்கு வாசிப்பு அனுபவம் என்பதே கொஞ்சம் கூட இல்லையே, செய்தித்தாள்களை தவிர்த்து மற்ற எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாக வாசித்தது இல்லையே, வாசித்து புரிந்து கொள்வதற்கு கடினமான மூலதன நூலை வாசிப்பதை எப்படி சாத்தியமாக்குவது என கேட்டேன்’’. 

அதற்கு அவர் ’’நீங்கள் நேரத்தை ஒதுக்கி வாசிப்பதற்கு முதலில் வாருங்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு உண்டாகும் சிரமங்களை வகுப்பை நடத்தக்கூடிய தோழர்கள் தீர்த்து வைப்பார்கள்’’ எனக் கூறினார். அதன் பிறகு மெய்நிகர் வாசிப்பு கூட்டத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணியில் இருந்து பத்து மணி வரை வாரத்தில் ஒரு நாள் மூன்று மணி நேரம் வாசிக்க வகுப்பில் இணைந்தோம்.

மெய் நிகர் வகுப்பை வழிநடத்தக் கூடிய தோழர் சிவக்குமார் மற்றும் தோழர் மோகனஹரி ஆகியோருடன் இணைந்து மொத்தம் பத்து தோழர்களுடன் மூலதன நூலை வாசிக்க தொடங்கினோம்.

தோழர் சிவகுமார் மூலதனநூலை ஏற்கனவே இரண்டாயிரத்தி பத்தாம் ஆண்டிலிருந்து வாசித்துக் கொண்டும், வாசிப்பவர்களை வழிநடத்திக் கொண்டும் இருக்கிறார். மூலதன நூல் வாசிப்பில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் அவர். தோழர் மோகனகிரி மூலதன நூலை வாசித்துகொண்டும் எங்களுடன் தொடர்ந்து இன்றைய வரைக்கும் வகுப்பை ஒருங்கிணைத்துக் கொண்டும் இருக்கிறார். 

இந்தக் குழுவானது மூன்றாம் பாகத்தை இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆரம்பத்தில் முதல் பாகம் வாசிப்பதற்கு முன்பாக நேரடியாக மூலதன நூலை வாசிக்காமல் மார்க்ஸின் கூலி விலை லாபம் என்ற நூலும், லெனினின் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் என்ற இரு சிறு நூல்களை முதலில் வாசிக்க ஆரம்பித்தோம். இந்தப் சிறு புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த போதும் கூட எனக்கு எதுவுமே புரியவில்லை. இந்தப் புத்தகங்களை வாசிக்கும் போதே நாம் மூலதன நூல் வாசிப்பை தொடர வேண்டுமா மிகவும் கடினமாக இருக்கிறது என்றும் கூட யோசித்தேன்.

ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருமே தங்களுடைய சொந்த நேரத்தை செலவிட்டு வகுப்பை நடத்துகிறார்கள். அவர்கள் எப்படியாவது சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சமூகப் பணியை ஆற்றுகிறார்கள், ஆகையினால் நாம் ஒன்று அந்த வகுப்பில் தொடர வேண்டும் தொடர்ந்து முழுமையாக என்னை ஈடுபடுத்தி நல்ல புரிதலோடு வாசிக்க வேண்டும் அல்லது வகுப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதையும் சிந்தித்தேன்.

இருந்தாலும் தொழிற்சங்க ஈடுபாடுகளில் இருப்பதால் சமூகத்தில் தொழிலாளர்கள் படும்பாட்டை தொடர்ந்து உற்றுநோக்கிக் கொண்டும் இருந்தமையால் மூலதன நூலை எப்படியாவது வாசித்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைத்தது. இந்த வாய்ப்பை தவறவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது. அதனால் மூலதன நூலை தொடர்ந்து வாசிப்பது என்ற முடிவை எடுத்து வாசிப்பில் முழு மனதுடனும் ஆர்வத்துடனும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இரண்டு மாதங்களில் இரு சிறு புத்தகங்கள் வாசித்து முடித்தோம். வாசித்து முடித்த பிறகும் கூட எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்று தான் இருந்தது..

இந்த நிலையில் கூட மூலதன நூலை வாசிக்க தொடர வேண்டுமா என்று என் உள் மனதில் ஒரு கேள்வி ஒன்று எழுந்தது ’’இந்த இரண்டு மாத காலங்களில் வாசிப்பு என்பது வாசித்து இருந்தாலும் இவை அனைத்துமே ஒன்றுமே புரியாவிட்டாலும் இந்த வாசிப்பை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்கள் அணுகுமுறை என்பது எனக்கு மிகவும் பிடித்த விதமாகவும், மனதை கவர்ந்தவகையாக இருந்தது’’ ஒருங்கிணைப்பாளர்களின் அனுபவத்துடன் கூடிய நல்ல அணுகுமுறையால் நான் மூலதன நூலை எப்படியாவது வாசித்து விட வேண்டும் என்ற ஒரு வைராக்கியத்தை உண்டு பண்ணியது.

ஏனென்றால் புத்தக வாசிப்பு அனுபவமே இல்லாத எனக்கு, மூலதன நூலை பல தடவை வாசித்தும், வகுப்பெடுத்தும், பல புத்தகங்களை ஆங்கிலத்தில் வாசித்து அதை புரிந்து கொண்டு மொழியாக்கம் செய்யும் அளவிற்கு இருக்கக்கூடிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றுமே தெரியாத என்னை வகுப்பில் அணுகும் முறை என்பது என்னை முதலில் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று ஈர்ப்பை உண்டாக்கியது இந்த முக்கியமான தருணம் தான்.

தொடர்ந்து மூலதன நூலை வாசித்தோம் வாசிக்கும்போது வரிக்கு வரி சந்தேகங்களை கேட்டுக் கொண்டே இருப்பேன் இதனால் வாசிக்கக்கூடிய பக்கங்களின் எண்ணிக்கை என்னால் குறைந்தது இருந்தாலும் அனைவரும் பொறுமையுடன் என்னுடன் தொடர்ந்து வாசிப்பை தொடர்ந்தார்கள்.

மூலதனநூலில் மார்க்ஸ் பல வரலாற்றை ஆய்வு செய்து முந்தைய காலத்திய வரலாறை மேற்கோளாக காட்டுகிறார், அவையெல்லாம் புரிவதே இல்லை. இருந்தாலும் அவருடைய கோட்பாட்டையும் கருத்தையும் உள்வாங்குவதற்கு முயற்சித்தேன். வாரத்திற்கு ஐந்து பக்கங்கள் என்ற அளவில் சராசரியாக முதல் பாகம் வாசித்து வந்தோம்.

புரிவதற்கும் உள்வாங்குவதற்கும் கடினமாக இருந்தது என்ற சூழ்நிலையில் தோழர் சிலம்பரசன் அவர்களை தொடர்பு கொண்டு ’’எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன செய்யலாம் நீங்கள் எப்படி இதை புரிந்து கொண்டீர்கள்’’ என்று அவருடைய அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என அவரை தொடர்பு கொண்டேன். அதன் பின் தோழர் சிலம்பரசன் ’’உங்களுக்கு தெரிந்த தமிழில் சுலபமாக மாற்றி எழுதி பல தடவை வாசித்து புரிந்து கொள்ளுங்கள் சுலபமாகிவிடும் ஆழ் மனதிலும் நன்றாக பதிந்து விடும்’’ என்று அவரின் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை மூன்று மணி நேரம் வாசித்து விவாதிக்கும் ஐந்து பக்கங்களை மறுபடியும் புரிவதற்காக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் எடுத்துக்கொண்டு நானே எனக்கு புரிந்த வகையில் சுலபமான தமிழில் எழுதி எழுதி பல தடவை வாசித்து புரிந்து கொண்டு அடுத்த வாரம் புரிந்தவற்றை சுருக்கமாக வகுப்பு ஆரம்பிக்கும்போது விளக்க முயற்சி செய்தேன்.

ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். ஏனென்றால் மார்க்சியம் என்றால் என்ன ? என்று மேலோட்டமாக தெரிந்த தோழர்களாகட்டும், வேறு மார்க்சிய நூல்களை வாசித்த தோழர்களுக்குமே மூலதன நூலை வாசித்து புரிந்து கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. இந்த நிலையில் நான் மூலதன நூலில் ஓரளவுக்கு புரிந்து கொண்டு மீண்டும் ஒவ்வொரு வாரமும் வகுப்பின் தொடக்கத்தில் சுருக்கமாக விளக்கவும் முயற்சி செய்து கொண்டிருந்ததை ஒருங்கிணைப்பு செய்யக்கூடிய தோழர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள் ’’கடுமையான அளவில் நேரத்தைச் செலவிட்டு இந்த நிலைமையில் நான் விளக்க முயற்சி செய்கிறேன்’’ என்பதை புரிந்து கொண்டு பாராட்டுவதும் உண்டு. இந்தப் பாராட்டுக்கள் என்னை மேன்மேலும் மேன்மைப்படுத்திக் கொள்ள உத்வேகத்தை தூண்டியது… இப்படி எழுதி எழுதி வாசித்து புரிந்து கொண்டு முதல் பாகம் முடியும் பொழுது எட்டு நோட்டு புத்தகங்களை (long size note) எழுதி முடித்து இருந்தேன்.

முதல் பாகம் வாசிப்புக்கு முன் ஒரு சாதாரண தொழிலாளியாக நாட்டு நடப்புகள் தெரியாத முதலாளித்துவம், மார்க்சியம் தெரியாத சாதாரண மனிதனாக இருந்தேன். வாசிப்புக்கு பின் சமூகத்தை முழுமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு தோழர் காரல் மார்க்ஸ் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார் என்பதை தெளிவாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் மனிதர்கள் ஏன் இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையேயும் வாழ்கிறார்கள். திருடர்களாக, அனாதைகளாக, பிச்சைக்காரர்களாக, கொலைகாரர்களாக, சுயநலம் கொண்டவர்களாக, பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவும் எதனால் நடக்கிறது ? ஒரு தரப்பினர் ஏன் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு தரப்பினர் ஏன் சுரண்டப்பட்டு பொருளாதாரத்தில் கீழ் நோக்கி சென்று கொண்டே உள்ளார்கள் என்பதை மார்க்ஸ் தெளிவாக முதல் பாகத்தில் நேரடியாக புரியவைக்கா விட்டாலும் அவரின் கருத்துக்கள், கோட்பாடுகளை உள்வாங்குவதால் நம்மை மறைமுகமாக சிந்திக்க வைத்து புரிய வைத்துவிடுகிறார்.

அதேபோன்று மூலதன நூலை வாசித்தவுடன் காரல் மார்க்ஸ் நம்முடைய சுய சிந்தனையை அதிகரிக்கச்செய்து ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்து இலக்கிய வாதியாகவும் மாற்றி விடுகிறார்.

மூலதன நூல் வாசிப்பிற்குப் பிறகு என் துணைவியார் ’’நமது வீட்டில் உங்களிடத்தில் பல நல்ல மாற்றங்களை கண்டிருக்கிறேன்’’ என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். இதற்கு காரணம் காரல் மார்க்ஸ் தானா என்று கூட என்னிடம் கேட்டிருக்கிறார்.

தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையும் மார்க்ஸ் மாற்றி இருக்கிறார் என்பதையும் உணர்ந்தேன். பொது இடத்தில் நான்கு பேருக்கு முன்பு பேசும்போதே கூச்ச உணர்வு என்பது அனைவருக்கும் இருக்கும். அது எனக்கும் இருந்தது. ஆனால் மூலதனநூலை வாசிக்க வாசிக்க தானாகவே பேச்சுத் திறமை என்பது பழைய மாதிரி இல்லாவிட்டாலும் முன்னேற்றம் என்பது இருக்கிறது. இன்று கட்டுரை எழுதும் அளவுக்கு மூலதன நூல் என்னை வளர்த்திருக்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

அதே போன்று யாரை எந்த இடத்தில் தைரியமாக விமர்சனம் செய்ய வேண்டும் யாரை எந்த இடத்தில் பாராட்ட வேண்டும் என்ற சூழலையும் கற்றுக் கொடுக்கிறார். நாம் உண்மையாக இருந்தால் தைரியமும் தானாகவே வரும். ஆகையினால் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபடும்போது மூலதனநூலை வாசித்தவர்கள் தொழிற்சங்க இயக்கத்துக்கு வரும் பொழுது மூலதனத்துடனும் முதலாளியுடனும் எந்த விதமான சமரசமும் இல்லாமல் தொழிலாளர்களுக்காக உரிமையை மீட்டெடுப்பதற்கும் தைரியமான போராட்டக் குணத்துடன் கூடிய மன பக்குவம் தானாகவே தொழிற்சங்கவாதிக்கு வந்துவிடும்.

மனித உழைப்பு மட்டும்தான் புதிய மதிப்பை உருவாக்குகிறது. உருவாக்குகிற புதிய மதிப்பில் ஒரு பகுதி கூலிக்காகவும் மறுபகுதி முதலாளியின் உபரி மதிப்பாகவும் அதாவது லாபத்திற்காகவும் செல்கிறது. எந்த அளவிற்கு கூலியை குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு முதலாளியின் உபரி மதிப்பு அதிகரிக்கும். ஆகையினால் முடிந்த அளவு முதலாளி கூலியை குறைத்துக் கொண்டே இருப்பார். குறைப்பதில் முயற்சித்துக் கொண்டே இருப்பார். அதனால் உபரி மதிப்பு அவருக்கு அதிகமாகும் லாபம் அதிகமாகும். தொழிலாளி கூலி உயர தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பார். முதலாளித்துவ சமுதாயத்தில் போராட்டத்தின் விளைவாக மட்டுமே தொழிலாளியின் வாழ்க்கையே ஒட்ட முடியும் என்பதை முதல் பாகத்தில் மார்க்ஸ் புரிய வைக்கிறார்.

முதலாளித்துவம் இருக்கும் வரையில் தொழிலாளர்களின் போராட்டம் என்பது நிரந்தரமானது இந்த நிரந்தரமான போராட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றால் தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காகவும், தங்களின் உரிமையை காக்க வேண்டும் என்பதை எல்லாம் விட்டுவிட்டு முதலாளித்துவம் ஒழிக , சோசியலிசம் வாழ்க என்ற வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு போராடி முதலாளித்துவத்தை வீழ்த்தி புரட்சி செய்ய வேண்டும் என்பதை தெளிவாக நமக்கு கற்றுக் கொடுக்கிறார் தோழர் காரல் மார்க்ஸ்.

நான் கூறுவது அனைத்துமே மேலோட்டமாக அறிமுக உரைக்காக எழுதப்பட்டது. முதல் பாகம் முழுவதுமாக வாசிக்கும் போது ஒரு முழுமையான மாற்றம் என்பது நம்முள் ஏற்பட்டிருக்கும் நம்முடைய சமூகத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை புரிந்து கொண்டு அது எதனால் வந்திருக்கக் கூடும் என்பதை சிந்திக்க தக்க வகையில் நம்மை சிறந்த மார்க்ஸிய மாணவர்களாக உருவாக்கி விடுகிறார். 

நாங்கள் இப்போது மூன்றாம் பாகம் 200- வது பக்கம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். இது ஒரு பெரிய சாதனையாகத்தான் நான் கருதுகிறேன். ஏனென்றால் இந்த ஐந்து வருட காலத்தில் பெரிய பெரிய அறிஞர்கள் கூட மூலதன நூலை வாசிப்பதற்கு என்னால் முடியவில்லை என்று நான் பலமுறை பல கூட்டங்களில் கலந்து கொண்டதன் மூலமாக தெரிந்து கொண்டேன். என்னை இதுவரையில் மூலதன நூல் வாசிப்பில் பயணிக்க வைத்த தோழர் காரல் மார்க்ஸ்,தோழர்கள் சிவக்குமார் மோகன ஹரி,சேகரன்,கலைவாணன், சிலம்பரசன் மற்றும் 2021 ஆம் ஆண்டு மூலதன வாசிப்புக்குழு தோழர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..நன்றி 

மீண்டும் சந்திப்போம்.

Comments

10 responses to “ஒரு தொழிலாளியின் மூலதனம் நூல் வாசிப்பு அனுபவம்.”

  1. Amutha K Avatar
    Amutha K

    மிக அருமையான பதிவு

  2. Jothivenkateswaran V Avatar
    Jothivenkateswaran V

    🙏

  3. Amutha K Avatar
    Amutha K

    🙏

  4. Jothivenkateswaran V Avatar
    Jothivenkateswaran V

    🙏🙏🙏

  5. P. Jayaraman Avatar
    P. Jayaraman

    சரியான பார்வை. எனக்கொன்று தெரியும் அதை உனக்கு சொல்கிறேன் என்ற சொல்லாடல் எந்த இடத்திலும் எழவில்லை. வாழ்த்துக்கள் தோழர்

  6. Balaji Avatar
    Balaji

    அருமையான கட்டுரை தோழர், இவ்வளவு பெரிய கட்டுரை எந்த சோர்வையும் உருவாக்கவில்லை. வார்த்தை பிரயோகம் அருமை. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

  7. Jothivenkateswaran V Avatar
    Jothivenkateswaran V

    நன்றி

  8. Jothivengadaswaran.v Avatar
    Jothivengadaswaran.v

    மூல தான கட்டுரை அருமையாக உள்ளது

  9. ஜோதி வெங்கடேஸ்வரன் Avatar
    ஜோதி வெங்கடேஸ்வரன்

    மிக அருமையான பதிவு

  10. கலைவாணன் Avatar
    கலைவாணன்

    உங்கள் வாசிப்பனுபவ கட்டுரை சிறப்பு.

    தனிமனித ஒழுக்கத்தையும், நேர்மையையும் வளர்த்தெடுக்கும் தோழர் மார்க்ஸ், தொழிலாளர் வர்க்கத்தின் மீது நம்பிக்கையிழக்காமல் வழிநடத்தியும் செல்கிறார்.

    இந்த சமூகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டும், மாற்றமடைந்துகொண்டும் இருக்கிறது என்ற சமூக விஞ்ஞானம் பெரும்பகுதி மக்களால் புரிந்து கொள்ளப்படவில்லை.

    மூலதனம் நூலையும், சமூகம் மாற்றமடைந்து கொண்டிருக்கிற நிகழ்வையும் உழைக்கும் மக்களிடகொண்டுசெல்ல வேண்டிய தேவையிருக்கிறது. அதை செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *