திராவிட மாடலின் தந்தை MGR

(Part 1 – குடிசை மாற்று வாரியம்!)

முன்னுரை
இந்த தொடர் சுதந்திரத்திற்கு பிறகான தமிழ்நாட்டு அரசியலில் திராவிட மாடலின் தாக்கத்தை பற்றி விளக்குகிறது. திராவிட மாடலின் முகமாக திமுக தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும் அதன் அடித்தளத்தை கட்டியமைத்தவர் என்றுமே MGR ஆக தான் இருந்திருக்கிறார் என்பதை தக்க ஆதாரங்களுடன் இந்த கட்டுரை விளக்குகிறது. முதல்பாகமாக குடிசைமாற்று வாரியத்தை ஒரு முன்னுதாரணமாக கொண்டு துவங்குகிறது இந்த தொடர்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து பிறகு திமுகவின் எழுச்சியும் MGR இன் தேர்தல் வெற்றியையும் 1990 களுக்கு பிறகான மாற்றங்களையும் சேர்த்தே ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தில் அலசுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்! தென்னிந்திய கலாச்சார தலைநகரமான சென்னையை அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

வட சென்னையும் போப் வருகையும்
போப் இரண்டாம் ஜான் பால் – நான் பள்ளிக்கல்வி படிக்கும் போது இவர் பெயர் மிகப்பிரபலம். ஏதாவது ஒரு செய்திகளில் அடிக்கடி இவர் பெயர் வந்துகொண்டே இருக்கும். போப் இரண்டாம் ஜான் பால் சென்னைக்கு (முந்தைய மெட்றாசுக்கு) February 5, 1986 அன்று வருகை புரிந்தார். Reagan thatcher 1980 களில் ஏற்படுத்திய (U.S. President Ronald Reagan and UK Prime Minister Margaret Thatcher) முதல் நவதாராளமயமாக்கல் கொள்கை அலையை Global south எனப்படும் தெற்குலகின் வளரும் நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பல நிறுவனங்களில் வாடிகனும் ஒன்று. அதில் பெரும்பங்காற்றியவர் போப் இரண்டாம் ஜான் பால். அதை வட சென்னை படத்தில் வெற்றிமாறன் ஒரு சிறப்பான பாணியில் காட்சிப்படுத்தி இருப்பார். போப்பிற்கும் வடசென்னைக்கும் குடிசைமாற்று வாரியத்துக்கு ராஜனுக்கும் எவ்வளவு சம்பந்தம் வடசென்னை படத்தில் இருக்கிறதோ நிஜத்திலும் அவ்வளவு சம்பந்தம் இருக்கிறது.

“நான் அவனை மாதிரி பேப்பர் ரவுடி இல்லண்ணே!” என்று சொன்ன பல நிஜ உலக ராஜன்களின் மீது கட்டி எழுப்பப்பட்டது தான் இந்த குடிசைமாற்று வாரியம்.

குடிசைப்பகுதிகளை எவ்வாறு கையாள்வது என்ற வரலாற்று விவாதத்தை இந்த கட்டுரை காலவரிசைப்படி ஆராய்கிறது. அதை நாம் மூன்று வகையாக பிரிக்கலாம்!

  1. முதலாவதாக பிரிட்டிஷ் காலம் முதல் காமராஜர் காலம் வரை
  2. இரண்டாவதாக அண்ணா காலம் முதல் MGR காலம் வரை
  3. மூன்றாவதாக 1990 களுக்கு பிறகு

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் சென்னை (மெட்ராஸ்) மிக முக்கிய தொழில்நகரமாக விளங்கியது.
நகரத்திற்குள் ஐரோப்பியர்களுக்குச் சொந்தமான ஜவுளித் தொழிற்சாலைகள் Binny Mill – Buckingham mill and Carnatic Mills (B&C Mills) பிரசித்தி பெற்றவை.

இந்தியாவின் முதல் labour union உருவானது இங்கே தான்! 1918 இல்
Madras labour union என்ற பெயரில் உருவாகி இந்தியாவுக்கே முன்னுதாரமாக இருந்தது!

இதே போல பெரம்பூர், அயனாவரம் பகுதிகளில் ரயில்வே பெட்டிகள் சீர்செய்யும் தொழிற்சாலைகளும் உருவாகின. இதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரித்தன. இதன் விளைவாக, சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் நகரத்திற்கு இடம்பெயரத் தொடங்கினர்.

பிரிட்டிஷ் காலத்தில் குடிசைகளை எப்படி கையாள்வது என்று எந்த திட்டங்களும் வகுக்கப்படவில்லை!

இந்தியா 1947 இல் சுதந்திரம் பெறுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது. முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களில் குடிசைகளை மாற்ற முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆண்டதால் காமராஜர் ஆட்சி வரை கொள்கைகளில் மத்திய மாநில அரசுகளுக்கு எந்த பெரிய வித்தியாசமும் இல்லை.

காமராஜர் ஆட்சி வரை இருந்த காங்கிரஸ் அரசிற்கு குடிசைகளை மாற்றுவதில் முக்கியமாக இரண்டு முக்கியமான அணுகுமுறைகள் இருந்தன: (Tamilnadu State Housing Board Act 1961)

  1. நீர்நிலைகளுக்கு அருகிலும் அதிக மக்கள் நெரிசல் உள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள குடிசைப்பகுதி வீடுகளை அகற்றி, மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது. (Slum Clearance and Relocation).
  2. குடிசைப்பகுதி மக்கள் அதே இடத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதித்து, அப்பகுதியின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது. (In-situ Slum Upgrading).

அந்தக் காலகட்டத்தில் குடிசைப்பகுதிப் பிரச்சினைக்குத் தீர்வாக மறுசீரமைப்பு அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதாவது குடிசைப்பகுதி மக்களை வேறு இடங்களுக்கு மாற்றாமல், அவர்கள் வசிக்கும் அதே இடத்தில் குடியிருப்புகளை மேம்படுத்துவதாகும்.

இதனடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்த மிகவும் ஏழ்மையான மக்களுக்கு கணிசமான பொதுநிதி முதலீட்டின் மூலம் இலவசமான நவீன வீடுகள் வழங்கப்பட்டது. இந்த நவீனமயமாக்கல் அணுகுமுறை, குடிசைப்பகுதிகளில் குடிநீர்க் குழாய்கள், கழிப்பறைகள் மற்றும் மின்சார வசதிகளை ஏற்படுத்துவதில் பிரதிபலித்தது (Tamilnadu State Housing Board Act 1961).

குடிசைப்பகுதிகளுக்கான இந்த மறுசீரமைப்பு அணுகுமுறை, நோய்கள், குற்றங்கள், அசுத்தம் போன்ற சூழ்நிலைகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆபத்தானவை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

திராவிட ஆட்சியின் எழுச்சி
1967 இல் அண்ணாதுரை தலைமையிலான திமுக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கிறது. தமிழ்நாட்டிற்கு என பிரத்யேகமான மத்திய அரசின் கொள்கைகளில் இருந்து விலகி (அல்லது) தனித்துவமான கொள்கைகள் தீட்டப்படுகிறது.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் உருவாக்கம்
குடிசைப்பகுதிக் கொள்கையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் (Tamil Nadu Slum Clearance Board – TNSCB) உருவாக்கப்பட்டது இந்தக் காலகட்டத்தின் மிக முக்கியமான நிகழ்வாகும். இதன் மூலம் குடிசைப்பகுதிக் கொள்கைகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் இந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

1971ஆம் ஆண்டு குடிசைப்பகுதி அகற்றச் சட்டத்தில் குடிசைப்பகுதிக்கான விளக்கம் பின்வருமாறு வழங்கப்பட்டது:
“தாழ்வான நிலப்பரப்பு, சுகாதாரமற்ற சூழல், மோசமான குடியிருப்பு நிலை, அதிக மக்கள் நெரிசல் அல்லது வேறு காரணங்களால், அந்தப் பகுதியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் வசிக்கும் பொதுமக்களின் உடல்நலம், பாதுகாப்பு அல்லது வசதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது ஏற்படுத்த வாய்ப்புள்ள எந்தவொரு பகுதியும் குடிசைப்பகுதியாகக் கருதப்படும்.”
(பக்கம் 843, Slum Clearance Act 1971)

சர்வதேச நிதி நிறுவனங்களின் வருகை

1970களின் பிற்பகுதியில், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி மற்றும் உதவி வழங்குவதில் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஈடுபடத் தொடங்கின. இது குடிசைப்பகுதிக் கொள்கையில் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கமாக அமைந்தது.

1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக கருணாநிதி இருந்த போது உலக வங்கி தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கத் தொடங்கியது. முக்கியமாக நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு உதவி வழங்குவதே உலக வங்கியின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் அது நிபந்தனைகளுடன் கூடிய நிதியுதவிகளை மட்டுமே வழங்கியது.

1975ஆம் ஆண்டு குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களுக்காக உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க முன்வந்தது. இந்த நிதியுதவி, இலவசமாக வீடுகளை வழங்குவதற்கான அரசின் செலவினங்களைக் குறைக்கத் தூண்டியது.

ஆனால் முன்நிபந்தனையாக, குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களின் பயனாளிகளிடமிருந்து அவர்கள் பயன்படுத்தும் வசதிகளுக்கான செலவுகளைப் பெற வேண்டும் என்று உலக வங்கி அரசாங்கத்தை வலியுறுத்தியது.

காமராஜர் காலத்தில் குடிசைப்பகுதி மக்களுக்கு இலவசமாக மேம்படுத்தப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டன.
ஆனால் புதிய கொள்கையில், அதே இடத்தில் குடிசைப்பகுதிகளை மேம்படுத்தும்போது பயனாளிகளிடமிருந்து கட்டணம் வசூலிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் குடிசை வாழ்மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த திட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே இடதுசாரி கட்சிகள் மிகத் தீவிரமாக எதிர்த்தன!

அந்தக் கட்டணம் “மேம்பாட்டுக் கட்டணம்” (Betterment Fee) அல்லது வாடகை வடிவில் வசூலிக்கப்பட்டது.

1977 முதல் 1985 வரை, வெறும் 1,010 குடும்பங்கள் மட்டுமே குடிசைப்பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டதாகவும் வெளியேற்றப்பட்டதாகவும் உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் 15,750 குடும்பங்களின் குடியிருப்புகள் அதே இடத்திலேயே மேம்படுத்தப்பட்டன (World Bank Report, 1985).

ஆனால் அதற்கு பிறகு வந்த MGR ஆட்சிக் காலத்தில் நிலைமை மாறியது! அதற்க்கு உலகவங்கியின் நிர்பந்தமும் முக்கிய காரணமாக அமைந்தது.

உலக வங்கியின் 1985ஆம் ஆண்டு மெட்ராஸ் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“குடியிருப்பு உரிமை ஒப்பந்தங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், பயனாளிகளிடமிருந்து செலவுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையைத் தாமதப்படுத்தியது மட்டுமல்லாமல், அதனைப் பெருமளவில் பாதித்தது. குடிசைப்பகுதிகளில் செலவு மீட்பு என்பது இந்தத் திட்டத்தின் புதிய முயற்சியாகும். எனவே, கட்டண வசூல் விகிதத்தை மேலும் மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் வருவாய்ப் பிரிவை வலுப்படுத்த வேண்டும்.”
(World Bank Report, 1985)

1980களின் நடுப்பகுதியிலும் 1990களின் தொடக்கத்திலும், பயனாளிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் “Sites and Services” திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் நகர்ப்புறக் கொள்கைகளில் அதிகரித்தது.

மறுமேம்பாடு செய்யப்பட்ட குடிசைப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட மக்கள், வீடுகளைக் கட்டுவதற்கும் ஒதுக்கீடு செய்வதற்கும் ஏற்பட்ட செலவுகளை நிதியுதவி நிறுவனங்கள் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக அதிக வாடகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் விளைவாக, உலக வங்கியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பாக அந்த வாரியம் படிப்படியாக மாறத் தொடங்கியது.

இதற்கு உலக வங்கி வழங்க முன்வந்த கடன் தொகையில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வே முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

1980களின் இறுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது நகர்ப்புறப் பெருந்திட்டத்திற்காக உலக வங்கி 300 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க முன்வந்தது.

குடிசைப்பகுதி மக்களை ஒட்டுமொத்தமாக நகரின் புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றும் தீவிரமான “Sites and Services” திட்டத்திற்கு திமுகவும் இடதுசாரி கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.

ஆளும்கட்சியான அதிமுக உலகவங்கியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. சென்னை மெரினா கடற்கரையை (அண்ணா சமாதி முதல் கலங்கரை விளக்கம் வரை) அழகுபடுத்தும் நோக்கத்துடன் மீனவ கிராமத்தை அப்புறப்படுத்த எத்தனித்தது MGR அரசு. அதை எதிர்த்த போராட்டத்தட்டில் 1985 டிசம்பர் 4 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

1990களில் உலக வங்கியின் செல்வாக்கு அதிகரித்தல்

1991ஆம் ஆண்டு, உலகளாவிய அழுத்தங்கள் அதிகரித்ததன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது. இதன் மூலம் 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு முதன்முறையாக இந்திய நகரங்கள் உலகச் சந்தையுடன் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டன.

தனியார் துறையில் உருவான புதிய பொருளாதார வாய்ப்புகள் மற்றும் உலகப் பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நடுத்தர வர்க்கம் வேகமாக வளர்ந்தது.

நடுத்தர வர்க்கத்தின் இந்த வளர்ச்சி இந்திய நகர்ப்புறக் கொள்கைகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. நகரங்களை உலகத்தரம் வாய்ந்த அல்லது உலகளாவிய நகரங்களின் தோற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்தது.

முன்பு ஏற்கனவே சொன்னது போல 1987 இல் போப் சென்னைக்கு வந்து சென்றார். அதற்க்கு பிறகு அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மக்களின் ஒப்புதலை பெற உலகவங்கியின் கருத்துக்கள் திரைத்துறையில் பிரதிபலித்தது. தொடர்ச்சியாக குடிசைப்பகுதி மக்களை குற்றவாளிகளாக்கும் திரைப்படங்கள் அப்போது தான் வர ஆரமிப்பித்தன! (முதல்வன், ஆயுத எழுத்து, மைக்கில் மதன காம ராஜன், புதுப்பேட்டை, திருப்பாச்சி, etc )

குடிசைப்பகுதிகள் குறித்த நகர்ப்புற சமூகத்தின் கற்பனையில் உருவாக்கப்பட்ட குற்றச்செயல்கள், அழுக்குகள், ஒழுங்கற்ற, சுகாதாரமற்ற முறைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் போன்றவற்றின் காரணமாக, அவை ஒட்டுமொத்த நகர்ப்புறச் சமூகத்திற்கும் ஆபத்தானவை என்றும் சித்தரிக்கப்பட்டன. நோய்களின் பிறப்பிடமாக அவை விளங்குவதும் ஒரு வகையில் உண்மை தான்.

உலகத்தரம் வாய்ந்த நகரம் குறித்த கற்பனையில், குடிசைப்பகுதிகள், சாலைக் குழிகள், குப்பைகள் மற்றும் நகரின் ஒழுங்கற்ற தன்மையை வெளிப்படுத்தும் பிற அடையாளங்கள் இல்லாத நகர்ப்புற நிலப்பரப்புகளும் பொது இடங்களும் இடம்பெறுகின்றன.
உலகத்தரம் வாய்ந்த நகரங்களை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நகரம் என்பது வர்க்கப் போராட்டங்கள் நடைபெறும் இடமாக மாறியது.

நீர்நிலைகளின் கரைகளில் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்கான வாய்ப்புள்ள பகுதிகளில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகள், நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் தெருவோர வியாபாரிகள் ஆகிய அனைவரும் புதிய நகர்ப்புற அழகியலுக்கு எதிரானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

ஐந்து நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற குறிப்பிட்ட நகர்ப்புற அழகியல் அடையாளங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நகரத் திட்டமிடலின் நேரடி விளைவாகவும் குடிசைப்பகுதி வெளியேற்றங்கள் நடைபெறுகின்றன.

“ஒரு அமெரிக்க கனவு” இந்தியாவிலேயே நிறைவேறிவிடும் என்று வாக்குறுதிகள் தரப்படுகின்றன.தூய்மையான நகரம், நேர்த்தியான சாலைகள், பாலங்கள், கண்ணைக்கவரும் கண்ணாடி அடுக்குமாடிகள் கொண்ட சிங்கார சென்னை திட்டம் தயாராகிறது

இத்தகைய நவீன நகர்ப்புற அடையாளங்களை உருவாக்குவதற்குத் தேவையான நிலத்தைப் பெறும் முயற்சியில், நகர அரசாங்கங்கள் குடிசைப்பகுதிகளை ஆபத்தானவை என்றும் அபாயகரமானவை என்றும் மீண்டும் மீண்டும் சித்தரித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது. இது குடிசை மாற்று கொள்கைகளை அடுத்த அத்யாயத்திற்கு எடுத்துச் சென்றது.

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஆலோசனைகள், கட்டுமான ஒப்பந்தங்களுக்கான ஏலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் போன்ற பணிகள், அரசு–தனியார் கூட்டாண்மை (Public–Private Partnerships – PPPs) வழியாக நிறுவனங்கள் மற்றும் தனியார் முகவர்களிடம் ஒப்படைக்கப்படத் தொடங்கின.

முன்னர் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த திட்டங்களில், தனியார் நிறுவனங்களின் பங்கேற்பு, முதலீடு மற்றும் செயலாக்கத்தை இணைப்பதே அரசு–தனியார் கூட்டாண்மை முறையாகும்.

உதாரணமாக, தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களை நிர்வகிப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதியம் (Tamil Nadu Urban Development Fund – TNUDF) உருவாக்கப்பட்டது.

உள்ளாட்சி நகர்ப்புற அரசாங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் குறிப்பாகத் தனியார் முதலீட்டாளர்கள் கடன் பெறுவதற்கான நிதியமைப்பையும் இது உருவாக்கியது (TNUIFSL Report 2004).

இந்தக் காலகட்டத்தில், மேம்பாட்டுத் திட்டத்தின் வரம்பை விளக்கும்போது குடிசைப்பகுதி மக்களின் “மறுகுடியமர்த்தல்” (Resettlement) என்பது வழக்கமான சொல்லாக மாறியது. நடுத்தர மக்களின் அங்கீகரம் அரசுக்கு கிடைத்தது.

சர்வதேச நிதி நிறுவனங்கள், வளர்ச்சிக்கான நிதியுதவிகள் எந்த அளவிற்குப் பயனுள்ளதாக உள்ளன என்பது போன்ற கருத்தாக்கங்கள் வலுப்பெறுகின்றன.

நவதாராளமயவாதம் மக்களின் நம்பிக்கையை பெறுகிறது

செலவு மீட்பு முறையில் காணப்பட்ட செயல்திறன் குறைபாடுகள் குறித்த கவலைகள் காரணமாக, உலக வங்கி நிதியுதவி வழங்குவதில் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றத் தொடங்கியது (World Bank 2005).

வளரும் நாடுகளில் வறுமையைக் குறைப்பதற்காக மட்டும் நிதியுதவி வழங்குவதற்குப் பதிலாக, அரசாங்கம் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் காட்டும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் நிதியுதவி வழங்கும் புதிய உத்தியை உலக வங்கி பின்பற்றியது.

இதன் மூலம் “நல்லாட்சி” (Good Governance) என்ற புதிய காலகட்டம் உருவானது.

அதாவது, அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைப்பதற்கும், வளர்ச்சித் திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் உள்ளாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களை ஊக்குவிக்கும் அணுகுமுறை முன்னெடுக்கப்பட்டது.

1992ஆம் ஆண்டு 73வது மற்றும் 74வது அரசியலமைப்புத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகமான முடிவெடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இந்திய நிர்வாக அமைப்பில், இதன் பொருள் மத்திய அரசின் அதிகாரங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகளவில் பகிர்ந்தளிப்பதாக இருந்தது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கும் இடையே பரஸ்பரச் சார்பு நிலை உருவானது.

இதன் காரணமாக, குடிசைப்பகுதி மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் அவர்களுக்குச் சாதகமானவை என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டிய அரசியல் தேவை ஏற்பட்டது.

பேரிடர் நிகழ்வு ஏற்பட்டபோது, குடிசைப்பகுதிகள் அபாயத்தை உருவாக்குபவை மட்டுமல்லாமல், அவற்றின் தற்போதைய இருப்பிடங்களிலேயே இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடியவை (At Risk / Vulnerable) என்றும் சித்தரிப்பதற்கான புதிய வழிமுறையும் கூடவே அரசாங்கத்திற்குக் கிடைத்தது. (2004 சுனாமி, 2005 பெரு வெள்ளம் முதல் 2015 வெள்ளம் மற்றும் 2016 புயல் வரை)

குடிசைப்பகுதிகள் தங்களுடைய தற்போதைய இருப்பிடங்களில் பேரிடர் ஆபத்தில் இருப்பவை என்றும், அதே நேரத்தில் தங்களுக்கும் பொதுமக்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்துபவை என்றும் சித்தரிக்கப்பட்டன. திமுகவும் அதிமுகவும் இந்த தருணத்தில் கூட்டு சேர்ந்து இத்தகைய கருத்தாக்கங்களை உருவாக்கின.

இதன் மூலம், குடிசைப்பகுதி மக்களை இடமாற்றம் செய்வதை பேரிடர் நிவாரணம் மற்றும் மக்கள் நல நடவடிக்கையாக அரசாங்கம் முன்வைத்தது.

குடிசைப்பகுதிகள் தற்போது ஆக்கிரமித்துள்ள அதிக மதிப்புள்ள நிலங்களைப் பெறுவதற்கான தனியார் மேம்பாட்டாளர்களின் முயற்சியும் குடிசைப்பகுதிக் கொள்கைகளில் பிரதிபலித்தது.

இதற்காக அரசாங்கம் “மேம்பாட்டு உரிமைகள் பரிமாற்றம்” (Transfer of Development Rights – TDR) என்ற சட்ட வழிமுறையைப் பயன்படுத்தியது.

நில உரிமையாளர் விட்டுக்கொடுக்கும் அல்லது ஒப்படைக்கும் நிலப்பரப்பிற்கு ஈடாக, வேறு இடத்தில் குறிப்பிட்ட கூடுதல் கட்டிடப் பரப்பளவைப் பயன்படுத்துவதற்கான உரிமையை இந்த முறை வழங்குகிறது.

வேறு வார்த்தைகளில் கூறினால், குடிசைப்பகுதி மக்கள் வசிக்கும் நிலப்பகுதிகளை அரசாங்கம் TDR வழிமுறையின் மூலம் கையகப்படுத்தி, அவற்றை நவீன வசதிகளுடன் கூடிய வணிக அல்லது குடியிருப்பு வளாகங்களாக மேம்படுத்துகிறது (PMAY 2015).

மக்கள் தங்களுடைய தற்போதைய இருப்பிடங்களை விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக, நகரின் புறநகர்ப் பகுதிகளில் தனியார் மேம்பாட்டாளர்களால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் மாற்று வீடுகளாக வழங்கப்படுகின்றன (GO 172 2005).

2006 முதல் 2011 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும், தமிழ்நாடு அரசு 80,000 குடியிருப்புகளைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது.

இதற்காக ரூ.30 பில்லியன் செலவிடத் திட்டமிடப்பட்டது.

அவற்றில் 46,650 குடியிருப்புகள் 2010ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டிருந்தன அல்லது கட்டுமானத்தில் இருந்தன.

இதனுடன் ஒப்பிடும்போது, 2007ஆம் ஆண்டு வரை சென்னையின் ஒட்டுமொத்த நகர்ப்புற வரலாற்றில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளின் மொத்த எண்ணிக்கை 81,038 ஆகும்.

வேறு வார்த்தைகளில் கூறினால், நகரம் உருவான காலத்திலிருந்து அதுவரை கட்டப்பட்ட குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு இணையான அளவிலான குடிசைப்பகுதி மறுகுடியமர்த்தல் வீடுகள், 2006 முதல் 2011 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டுமே கட்டப்பட்டன. அதாவது வேறு விதத்தில் சொல்வதாக இருந்தால் MGR ஆட்சிக்காலத்தில் எந்த திட்டத்தை திமுக எதிர்த்ததோ அதை இப்போது மிக வீரியமாக நிறைவேற்றும் பொறுப்பை அதே திமுக ஏற்றுக்கொண்டது.

சென்னையின் இரண்டாவது பெருந்திட்டம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: (Second Master Plan 2008)
“கடந்த காலங்களில் பேரிடர்கள் ஏற்பட்டதையும் அவற்றால் ஏற்படும் அபாயங்களையும் அறிந்திருந்தபோதிலும், சில கலாச்சார மற்றும் வரலாற்றுக் காரணங்களாலும், அந்தப் பகுதிகளில் வசிப்பதால் கிடைக்கும் நன்மைகளாலும் மக்கள் தொடர்ந்து பேரிடர் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

மக்கள் தொகை அதிகரிக்கும்போதும், குடியிருப்புகள் நெருக்கமாகும்போதும், மனித நடவடிக்கைகள் அதிகரிக்கும்போதும் அபாயத்தின் அளவு மேலும் அதிகரிக்கிறது.

இதனால் நிலைமை மோசமடைந்து அதிகமான மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

பேரிடர்களைச் சமாளிப்பதற்கு தயார்நிலையும் திட்டமிடலும் மட்டுமே வழிகளாகும்.”

திடீரெனெ ஏற்படும் வெள்ள அபாயங்களை காரணம் காட்டி கூவம் ஓரம் வசிக்கும் மக்கள் நகருக்கு வெளியே அப்புறப்படுத்தப் படுகிறார்கள். அரும்பாக்கத்தில் இருந்த பொதுமக்கள் அடித்து விரட்டப்பட்ட போதும் பாஷ்யம் constructions கூவம் நதி ஓரம் அடுக்குமாடி குடியிருப்புக்கான அங்கீகாரத்தை பெற எந்த தடையும் ஏற்படவில்லை

திடீர் நகரில் வசித்த மக்கள் ஒக்கியம் துரைப்பாக்கத்திற்கு (Okkiyam Thoraipakkam – OT) மாற்றப்பட்டனர்.

2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு அவசரகால அடிப்படையில் மிக விரைவாக உருவாக்கப்பட்ட குடிசைப்பகுதி மறுகுடியமர்த்தல் இடமாக ஒக்கியம் துரைப்பாக்கம் அமைந்தது.

இந்த எடுத்துக்காட்டு, அதே இடத்தில் குடிசைப்பகுதிகளை மேம்படுத்துவதைவிட மக்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு முன்னுரிமை அளித்த புதிய நகர்ப்புறக் கொள்கையைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

2008ஆம் ஆண்டு உலக வங்கியின் நிதியுதவியுடன், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 13,000 குடியிருப்புகளைக் கட்டியது (GO 371, 2008)

இடமாற்றத்தின் காரணமாகக் குறைந்த வருமானம் கொண்ட குடிசைப்பகுதி மக்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டன.

முன்னர் நகரின் மையப்பகுதிகளில் குறைந்த ஊதியத் தொழிலாளர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும், பிற முறைசாராத் துறைச் சேவை வழங்குபவர்களாகவும் பணியாற்றியவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழந்தனர்.

குடிசைப்பகுதி மக்கள் மறுகுடியமர்த்தப்பட்ட பல புதிய குடியிருப்புகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக, குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற கட்டுமானம் கொண்ட வெள்ள பாதிப்பை அடிக்கடி சந்திக்கும்படியான இன்னல்களை சந்திப்பது அதே மக்கள் தான்

முடிவுரை: திராவிட மாடலின் உண்மையான அடித்தளம் யார்?

சென்னையின் குடிசைப்பகுதிகளின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு முக்கியமான அரசியல் உண்மை நமக்குப் புலப்படுகிறது. குடிசைப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், குடியிருப்பு உரிமை மற்றும் நகரத்தின் வளர்ச்சி ஆகியவை வெறும் நிர்வாகப் பிரச்சினைகள் அல்ல; அவை வர்க்க அரசியலோடும் அதிகாரப் பகிர்வோடும் பின்னிப் பிணைந்தவை.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குடிசைப்பகுதி மக்களுக்கு அதே இடத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் குடிசைப்பகுதி மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு, இந்தப் பிரச்சினையை அணுகுவதற்கான தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் உலக வங்கியின் நிதியுதவியும் அதன் நிபந்தனைகளும் குடிசைப்பகுதிக் கொள்கையின் திசையைப் படிப்படியாக மாற்றின.

குறிப்பாக MGR ஆட்சிக்காலத்தில், குடிசைப்பகுதி மக்களை அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே மேம்படுத்துவதற்குப் பதிலாக, வேறு இடங்களுக்கு மாற்றும் அணுகுமுறை வலுப்பெற்றது. இது வெறுமனே வீடுகளை மாற்றியமைக்கும் திட்டம் அல்ல; நகரத்தின் நிலம் யாருக்குச் சொந்தமானது, நகரத்தின் வளர்ச்சியில் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்ற அடிப்படையான வர்க்கக் கேள்வியையும் எழுப்புகிறது.

இதில் மிகவும் முரண்பாடான விஷயம் என்னவென்றால், MGR ஆட்சிக்காலத்தில் எந்த அணுகுமுறையைத் திமுகவும் இடதுசாரிகளும் எதிர்த்தார்களோ, அதே அணுகுமுறையை 2006–2011 காலகட்டத்தில் திமுக அரசே மிகப்பெரிய அளவில் செயல்படுத்தியது. ஒருகாலத்தில் குடிசைப்பகுதி மக்களின் வாழ்விட உரிமைக்காக எதிர்க்கப்பட்ட கொள்கை, பின்னர் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மறுகுடியமர்த்தல் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, திராவிட அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சியின் தேர்தல் முழக்கங்களால் மட்டும் உருவானதல்ல. அதன் உண்மையான வரலாறு, வெவ்வேறு ஆட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், மக்கள் நலத் திட்டங்கள், அரசியல் சமரசங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் வழியாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடலின் பெருமையைப் பேசும்போது, அதன் வெற்றிகளை மட்டுமல்ல, அதன் முரண்பாடுகளையும் நாம் பேச வேண்டும். ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவது மட்டுமே சமூகநீதியாகிவிடாது. அவர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்படாமல், அவர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், சமூக உறவுகள் மற்றும் நகரத்தின் மீதான உரிமை ஆகியவற்றையும் பாதுகாப்பதே உண்மையான சமூகநீதி.

எனவே, திராவிட மாடலின் வரலாற்றை எழுதும்போது MGR-ஐயும், அண்ணாவையும், கலைஞரையும் தனித்தனியான அரசியல் அடையாளங்களாக மட்டும் பார்க்காமல், அவர்கள் உருவாக்கிய கொள்கைகளின் தொடர்ச்சியையும் முரண்பாடுகளையும் வர்க்கப் பார்வையில் ஆராய வேண்டியது அவசியம்.

இறுதியாக, ஒரு கேள்வி எஞ்சுகிறது: நகரத்தை அழகுபடுத்துவதற்காக ஏழை மக்களை நகரத்திலிருந்து அப்புறப்படுத்துவது வளர்ச்சியா?

“ஒரு அமெரிக்கக் கனவு” இந்தியாவிலேயே நனவாகிவிட்டதா? தூய்மையான நகரம், நேர்த்தியான சாலைகள், பிரம்மாண்டமான பாலங்கள், கண்ணைக் கவரும் கண்ணாடி அடுக்குமாடிக் கட்டிடங்கள் என ஒரு நவீன நகரத்தின் அடையாளங்களைக் கொண்ட சிங்காரச் சென்னை உருவாகிவிட்டதா?

கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்குப் பிறகு அந்தக் கனவின் யதார்த்தம் என்ன?

முப்பதாண்டுகாலப் போராட்டங்களும், மக்களின் வாழ்விட உரிமைக்காக எழுப்பப்பட்ட குரல்களும் வீணாகிப்போன நிலையில், அதே முடைநாற்றம் வீசும் கூவத்தின் கரையோரத்தில், கொசுக்களுக்கு நடுவே, குண்டும் குழியுமான சாலைகளுடன் சென்னை இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நகரத்தைத் தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கே ஊதியம் வழங்க முடியாத அவலநிலையை நோக்கி நகரம் தள்ளப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த நகரம் என்ற கனவு ஒருபுறம்; அந்த நகரத்தைத் தாங்கி நிற்கும் உழைக்கும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக்கூட உறுதிப்படுத்த முடியாத யதார்த்தம் மறுபுறம்.

இறுதியில், யாருக்கான வளர்ச்சி என்ற கேள்விக்கு விடையளிக்க முடியாமல், அந்த அமெரிக்கக் கனவு கூவத்தின் கரையோரத்திலேயே புதைந்து போனது!

  • Hammurabi

Refernece:

A Recipe for Disaster: Framing Risk and Vulnerability in Slum Relocation Policies in Chennai, India – Pranathi Diwakar
Chennai Metropolitan Development Authority (CMDA). 2008. Second Master Plan, Chennai. Government, Chennai: CMDA.

2008. “Second Master Plan for Chennai Metropolitan Area, 2026.” Volume 1
Economic and Political Weekly 44(26, 27):358–67.
Government of Tamilnadu. 1971. Tamil Nadu Slum Areas (Improvement and Clearance) Act. Chennai.
Tamilnadu State Housing Board Act 1961. Government, Chennai: Government of Tamilnadu.
Revenue Department. 2005. Government Order 172. Government, Chennai: Government of Tamilnadu.
Tamil Nadu State Disaster Management Agency (TNSDMA). 2014. “Tamil Nadu State Disaster Management
World Bank. 1977. First Madras Urban Development Project. Staff Appraisal Report, Chennai: The World Bank.
World Bank; TNSCB. 2005. Project Implementation Plan for World Bank aided Emergency Tsunami Reconstruction
Project. Government, Chennai: TNSCB.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *