Category: History

  • இந்திய அரசியலின் தீர்க்கப்படாத முரண்பாடு

    இந்திய அரசியலின் தீர்க்கப்படாத முரண்பாடு

    இந்திய அரசியலின் தீர்க்கப்படாத முரண்பாடு: அதிகாரப் போட்டியும் உழைக்கும் மக்களின் கேள்வியும்.
    OBC – தலித் ஒற்றுமை: இந்திய அரசியலின் அடுத்த கட்டமா?

    இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால், அதிகாரத்திற்கான போட்டி என்பது வெறும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி அல்ல என்பதை காண முடியும். அது சமூக சக்திகளுக்கு இடையேயான போட்டியாகவும் இருந்துள்ளது.

    பல நூற்றாண்டுகளாக பார்ப்பன சமூகங்களுக்கும் மூன்று வர்ணம், பார்ப்பனர் அல்லாத ஆதிக்க சாதிகளுக்கும் – OBC ஆதிக்க சாதி- இடையே அதிகாரப் போட்டி பல வடிவங்களில் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்தப் போட்டியின் மையத்தில் இருந்த தலித் மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலைமையில் அடிப்படையான மாற்றம் முழுமையாக ஏற்படவில்லை என்பதும் வரலாற்றின் ஒரு உண்மையாக உள்ளது.

    பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக பல சமூக இயக்கங்கள் உருவாகின. பல மாநிலங்களில் OBC சமூகங்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றின. ஆனால் அதிகாரம் கைமாறியது மட்டுமே நடந்தது; அதிகாரத்தின் சமூக இயல்பு முழுமையாக மாறவில்லை என்ற சமூக யதார்த்த நிலை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

    இதன் விளைவாக ஒரு முரண்பாடு உருவாகிறது.

    பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான அரசியல் வளர்கிறது. ஆனால் அதே நேரத்தில் தலித் மக்களின் நில உரிமை, கல்வி வாய்ப்பு, சமூக பாதுகாப்பு, பொருளாதார அதிகாரம் ஆகியவை முழுமையாக உறுதி செய்யப்படுவதில்லை. அதே போல OBC மக்களில் பெரும்பான்மையினர் தலித் மக்களின் வாழ்க்கை நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள் இதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் OBC சமூகங்களுக்கும் இடையில் நம்பிக்கையின்மை உருவாகிறது.

    இன்று இந்தியாவின் அரசியல் சூழல் புதிய கட்டத்தை நோக்கி நகர்கிறது. வேலைவாய்ப்பு நெருக்கடி, விலைவாசி உயர்வு, ஒப்பந்தத் தொழிலாளர் முறை, gig economy சுரண்டல், தனியார்மயமாக்கல், கல்வி மற்றும் மருத்துவத்தின் வணிகமயமாக்கல் போன்ற பிரச்சனைகள் அனைத்து உழைக்கும் மக்களையும் பாதிக்கின்றன.
    இந்த பிரச்சனைகள் சாதி பார்த்து தாக்குவதில்லை.

    ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் OBC தொழிலாளியும், தலித் தொழிலாளியும், ஆதிவாசி தொழிலாளியும், குறைந்த சம்பளம், நீண்ட வேலை நேரம், வேலை பாதுகாப்பின்மை போன்ற ஒரே மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

    அதனால்தான் இந்திய அரசியலின் எதிர்கால கேள்வி:

    “OBC மற்றும் தலித் மக்களின் புதிய ஒற்றுமை உருவாகுமா?”

    என்பதாக மாறி வருகிறது.

    இந்தக் கேள்வி வெறும் கோட்பாட்டு விவாதம் மட்டும் அல்ல. நடைமுறை வாழ்க்கையிலேயே அதன் அறிகுறிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

    2026 பிப்ரவரியில் நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் தலைமையில். தொழிலாளர் சட்டங்கள், தனியார்மயமாக்கல், ஊதியப் பிரச்சனைகள் மற்றும் விவசாயக் கொள்கைகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    அதேபோல் ஹரியானாவின் மனேசர், பானிபட், உத்தரப் பிரதேசத்தின் நொய்டா போன்ற தொழிற்பகுதிகளில் குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இவர்கள் யாரும் தொழிற் சங்கத்தால் ஒருங்கிணைக்கப் பட்டவர்கள் அல்ல. மாறாக இந்தப் போராட்டங்களில் பல்வேறு சாதி மற்றும் சமூக பின்னணிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வுகள் ஒரு முக்கியமான உண்மையை சுட்டிக்காட்டுகின்றன.

    சாதி வேறுபாடுகள் இன்னும் இந்திய சமூகத்தில் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் புதிய வகையான ஒற்றுமைகளை உருவாக்கும் சாத்தியத்தை கொண்டுள்ளன.

    ஆனால் இங்கே ஒரு முக்கியமான அரசியல் கேள்வி எழுகிறது.

    இந்த OBC – தலித் ஒற்றுமையை தற்போதுள்ள முதலாளித்துவ அரசியல் கட்சிகள் உருவாக்க முடியுமா?

    ஏனெனில் இந்தியாவின் பெரும்பாலான முதலாளித்துவக் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட்டாலும், அவை செயல்படுவது ஒரே பொருளாதார அமைப்பிற்குள் தான். பெரிய நிறுவனங்கள், நிதி மூலதனம், நில உரிமை ஆதிக்கம், நிர்வாக அதிகார அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்கும் அரசியலையே அவை மேற்கொள்கின்றன. முதலாளிய கட்சிகள் தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்த இந்த முரண்பாட்டை பயன்படுத்தி கொண்டு மக்களை கை விட்டு விடும் இதை தான் கடந்த 70- ஆண்டு காலம் நாம் பார்த்து வருகிறோம்.
    அதனால் OBC மக்களின் சமூக நீதி கோரிக்கைகளும், தலித் மக்களின் முழுமையான விடுதலை கோரிக்கைகளும் இறுதிவரை கொண்டு செல்லப்படுவதில்லை. தேர்தல் கூட்டணிகள் உருவாகலாம்; வாக்கு வங்கி அரசியல் நடைபெறலாம்; சில பதவிகள் வழங்கப்படலாம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார அதிகாரத்தின் அடிப்படை கேள்விகள் பெரும்பாலும் தொடப்படுவதில்லை. எனவே உழைக்கும் மக்களின் ஒற்றுமையை இந்த கட்சிகளால் உருவாக்க முடியாது.

    எனவே OBC – தலித் ஒற்றுமை வெறும் தேர்தல் கூட்டணியாக அல்ல, உழைக்கும் மக்களின் அரசியல் கூட்டணியாக உருவாக வேண்டும்.

    அது சாதி அடையாளங்களை மறுப்பதன் மூலம் மட்டும் அல்ல; ஒடுக்குமுறையின் அனுபவங்களை அங்கீகரித்து, பொதுவான பொருளாதார மற்றும் சமூக நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைவதன் மூலம் மட்டுமே சாத்தியம்.

    இந்த ஒற்றுமைக்கு ஒரு அரசியல் திசையும் தேவை.

    மார்க்சிய அரசியலின் பார்வையில், அந்த திசையை வழங்கக்கூடிய சக்தி தொழிலாளர் வர்க்க அரசியலை முன்னிறுத்தும் கம்யூனிஸ்ட் இயக்கமாகும்.

    ஏனெனில் கம்யூனிஸ்ட் அரசியலின் மையக் கருத்து என்னவென்றால், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றத்தால் வராது; சமூக மற்றும் பொருளாதார அதிகாரத்தின் மறுவிநியோகத்தால் மட்டுமே வரும் என்பதாகும்.

    எனவே எதிர்கால இந்திய அரசியலின் மிகப்பெரிய பணியாக இருப்பது OBC, தலித், ஆதிவாசி மற்றும் அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்கும் புதிய மக்கள் கூட்டணியை உருவாக்குவதாகும்.

    அந்த கூட்டணி முதலாளித்துவக் கட்சிகளின் தேர்தல் கணக்கீட்டிற்குள் சிக்கிக் கொள்ளாமல், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைமையில் தங்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் போது மட்டுமே இந்திய சமூகத்தின் தீர்க்கப்படாத முரண்பாடுகளுக்கு ஒரு புதிய பதில் உருவாகும்

    Author: Silambarasan Che

  • ஏன் கம்யூனிஸ்ட்கள் புரட்சியை முன்வைக்கிறார்கள்?

    ஏன் கம்யூனிஸ்ட்கள் புரட்சியை முன்வைக்கிறார்கள்?

    “ஆட்சி மாற்றம்” மற்றும் “சமூக மாற்றம்” — இந்த இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல், எந்த அரசியலையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

    இதுவே கம்யூனிஸ்ட்கள் ஏன் வெறும் தேர்தல் அரசியலை தாண்டி “புரட்சி” பற்றி பேசுகிறார்கள் என்பதற்கான அடிப்படை காரணம்.
    தற்போதைய தமிழ் நாட்டை எடுத்துக் கொள்வோம். திமுக அரசாங்கம் தோற்று தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். ஆட்சி மாறிய பத்தே நாளில் ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. ஆனால் அந்த பிரச்சனைகள் அனைத்தும் புதிதாக உருவானவை அல்ல. நேற்று அவர்கள் ஆட்சியில் இருந்த போதே இருந்த பிரச்சனைகள் தான்.

    அப்போது இன்றைய ஆளும் கட்சி கேள்வி கேட்டது. இன்று எதிர்க்கட்சியாக மாறியவர்கள் நேற்று அதே கேள்விகளை எதிர்கொண்டார்கள். இப்போது மீண்டும் அதே நிலை.

    இதன் மூலம் ஒரு உண்மை தெளிவாகிறது: வெறும் கட்சி மாற்றம் மக்களின் வாழ்க்கையை அடிப்படையில் மாற்றுவதில்லை.
    திமுக, அதிமுக கடந்த பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சி செய்தன. இன்று மக்கள் புதிய மாற்றத்தை தேடி தவெக போன்ற புதிய கட்சிகளையும், விஜய் போன்ற புதிய தலைவர்களையும் நம்புகிறார்கள். இது மக்களின் ஏமாற்றத்தின் வெளிப்பாடு. ஆனால் புதிய முகம் வந்தால் மட்டும் பழைய சமூக அமைப்பு மாறிவிடாது.

    ஏனெனில் பிரச்சனை தனி மனிதர்களில் இல்லை; பிரச்சனை சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பில் இருக்கிறது. அரசியல் அதிகாரம், பொருளாதார வளம், ஊடக செல்வாக்கு, கல்வி வாய்ப்புகள் — இவை அனைத்தும் சில ஆதிக்க வர்க்கங்களின் கைகளில் தான் தொடர்ந்து இருக்கின்றன. தேர்தல் மூலம் அரசு மாறலாம்; ஆனால் அதிகாரம் செலுத்தும் வர்க்கம் மாறாமல் இருக்கிறது.
    இதையே கம்யூனிஸ்ட்கள் “ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கம்” என்று கூறுகிறார்கள்.

    ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது Flyover, IT Park, Express Highway அல்லது பெரிய முதலீட்டு மாநாடுகள் மட்டும் அல்ல. உண்மையான வளர்ச்சி என்பது Inclusive Growth — அதாவது அந்த நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முன்னேறுகிறதா என்பதில்தான் உள்ளது. ஆனால் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் கடந்த பல ஆண்டுகளில் அதிகம் வளர்ந்தவர்கள் அரசியல் வாதிகள், பெரிய தொழில் அதிபர்கள், நில உரிமையாளர்கள், Corporate நிறுவனங்கள் தான் என்ற விமர்சனம் தொடர்ந்து எழுகிறது. அதனால் தான் மக்கள் எந்த பழைய கட்சியிலும் நம்பிக்கை இழந்து புதிய மாற்றத்தை தேடுகிறார்கள்.

    ஆனால் கம்யூனிஸ்ட்கள் சொல்லுவது என்னவென்றால்: “புதிய ஆட்சியாளர் வந்தாலும், பழைய சமூக அமைப்பு அப்படியே இருந்தால், சுரண்டலும் அப்படியே தொடரும்.”
    இதற்காகவே அவர்கள் “புரட்சி” பற்றி பேசுகிறார்கள்.
    ரஷ்ய அனுபவம்
    1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த புரட்சிக்கு முன்பும் அரசாங்கங்கள் இருந்தன. மன்னராட்சி இருந்தது. பின்னர் இடைக்கால அரசும் வந்தது. ஆனால் சாதாரண தொழிலாளி, விவசாயி, படைவீரர் ஆகியோரின் வாழ்க்கையில் அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

    நிலம் சில பெரிய நிலத்தார்களின் கைகளில் இருந்தது. தொழிற்சாலைகள் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. போர், பசி, வேலை இழப்பு தொடர்ந்தன.
    அந்த சூழலில் தான் Vladimir Lenin தலைமையிலான போல்ஷெவிக்குகள், “வெறும் ஆட்சி மாற்றம் போதாது; அதிகாரத்தின் தன்மையே மாற வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

    அதனால் தான் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு நிலங்கள் தேசியமயமாக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. பழைய சாமந்தர் மற்றும் அரச குடும்ப ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது. பழைய ஆளும் வர்க்கம் மீண்டும் அதிகாரம் பிடிக்காமல் இருக்க தொழிலாளர், விவசாயிகள் அடிப்படையிலான புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது.

    இதனால் தான் கம்யூனிஸ்ட்கள் “புரட்சி என்பது வெறும் அரசாங்க மாற்றம் அல்ல; சமூக அதிகார மாற்றம்” என்று சொல்கிறார்கள்.

    சீன அனுபவம்
    அதேபோல சீனாவிலும் பல ஆண்டுகள் அரசியல் குழப்பங்கள் நடந்தன. பல கட்சிகள், பல ராணுவ சக்திகள், பல வெளிநாட்டு ஆதிக்கங்கள் நாட்டை கட்டுப்படுத்தின. ஆனால் விவசாயிகளின் வாழ்க்கை மாறவில்லை. நிலம் சில பெரிய நில உரிமையாளர்களின் கைகளில் தான் இருந்தது.

    அந்த சூழலில் Mao Zedong தலைமையிலான சீன கம்யூனிஸ்ட்கள், கிராமப்புற உழைக்கும் மக்களை அடிப்படையாக கொண்டு புரட்சியை முன்னெடுத்தனர். அவர்களின் வாதம் எளிமையானது: “பசியால் வாடும் விவசாயிக்கு வெறும் கொடி மாற்றம் பயன் இல்லை; நில உரிமை மாற்றம் வேண்டும்.”

    அதனால் தான் சீனப் புரட்சிக்குப் பிறகு நில சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. பழைய நிலத்தார்களின் அதிகாரம் உடைக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், உற்பத்தி போன்ற துறைகள் பொதுமக்கள் மையமாக மறுசீரமைக்கப்பட்டன.

    “மெளனப் புரட்சி” அல்ல, வெறும் கட்சி மாற்றம்
    இன்றைக்கு தேர்தல் முடிவுகளை சிலர் “மெளனப் புரட்சி” என்று கூறுகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்களின் பார்வையில் இது மிகைப்படுத்தல். ஏனெனில் சமூகம் அப்படியே இருக்கிறது. அதிகார உறவுகள் அப்படியே இருக்கின்றன. பணக்காரன் இன்னும் பணக்காரனாகிறான்; உழைக்கும் மக்கள் இன்னும் வாழ்வாதார போராட்டத்தில் தள்ளப்படுகிறார்கள்.

    அதனால் தான் பத்தே நாளில் “பத்தாயிரம் பிரச்சனைகள்” மீண்டும் வெளிப்படுகின்றன. காரணம், பிரச்சனையின் வேரே அகற்றப்படவில்லை.
    கம்யூனிஸ்ட்கள் முன்வைக்கும் புரட்சி என்பது வெறும் தேர்தல் வெற்றி அல்ல. அது சமூகத்தின் அடிப்படை அமைப்பை மாற்றும் அரசியல் முயற்சி. அதில் உழைக்கும் மக்களே அதிகாரத்தின் மையமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
    அவர்களின் கருத்துப்படி, புரட்சிக்குப் பிறகு பழைய சுரண்டல் வர்க்கம் புதிய அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்த முடியாத நிலை உருவாக்கப்பட வேண்டும். பணக்கார ஆதிக்கம், Corporate செல்வாக்கு, சுரண்டி வாழும் அரசியல் கூட்டணிகள் — இவை அனைத்தையும் உடைக்கும் சமூக மாற்றமே உண்மையான மாற்றம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
    அதனால் தான் கம்யூனிஸ்ட்கள் இன்னும் “புரட்சி” என்ற சொல்லை கைவிடவில்லை. ஏனெனில் அவர்கள் பார்வையில், வெறும் ஆட்சிமாற்றம் மக்களின் கோபத்தை தற்காலிகமாக மாற்றலாம்; ஆனால் சமூக அமைப்பை மாற்றாமல் உண்மையான விடுதலை சாத்தியமில்லை.

    • கிம் ஜாங் உன் பாசறை

    மார்க்சியமேஅரசியல்தீர்வு